ஆயுத புஜை கொண்டாட்டம் .. தமிழ்நாட்டின் பல்வேறு சந்தைகளில் அதிகரித்த பூக்களின் விலை

ஆயுத புஜை கொண்டாட்டம் .. தமிழ்நாட்டின் பல்வேறு சந்தைகளில் அதிகரித்த பூக்களின் விலை
ஆயுத புஜை கொண்டாட்டம் .. தமிழ்நாட்டின் பல்வேறு சந்தைகளில் அதிகரித்த பூக்களின் விலை

ஆயுத பூஜை கொண்டாட்டத்தை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல்வேறு சந்தைகளில் பூக்களின் விலை கடந்த வாரத்தை விட அதிகரித்தது.

தமிழ்நாடு முழுவதும் ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை கொண்டாட்டங்களும் வழிபாடுகளும் கோலாகலமாக நடைபெறும். இதில் மலர் அலங்காரம் முக்கிய அங்கம் வகிக்கும். இதற்காக மாநிலம் முழுவதும் உள்ள மலர்ச்சந்தைகளில் விறுவிறுப்பாக விற்பனை நடந்து வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால், தருமபுரி சந்தைக்கு பூக்களின் வரத்து குறைந்து, விலை அதிகரித்துள்ளது. கடந்த வாரம் ஒரு கிலோ 400 ரூபாய்க்கு விற்பனையான குண்டுமல்லி, 600 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கனகாம்பரம், அரளி, சாமந்தி உள்ளிட்ட பூ வகைகளின் விலை ஒரு கிலோவுக்கு அதிகபட்சம் 100 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர் மலர்ச்சந்தையில் இன்று 3 மணி நேரத்தில் 15 டன் பூக்கள் விற்பனையாகின. ஆயுத பூஜையையொட்டி விற்பனைக்காக 40 டன் பூக்கள் கொண்டுவரப்பட்டிருந்தன. ஆனால் விலை கடந்த வாரத்தை விட அதிகமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. கடந்த வாரம் 100 ரூபாய்க்கு விற்பனையான சம்மங்கிப் பூ, 300 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஒரு கிலோ பட்டன்ரோஸ் 320 ரூபாய், சாமந்தி 180 ரூபாய், மல்லி 600 ரூபாய் என விற்பனையானது.

திண்டுக்கல் மாநகராட்சி சந்தையிலும் 60 டன் பூக்களுடன் ஆயூத பூஜை விற்பனை களைகட்டியது. கடந்த வாரம் ஒரு கிலோன 400 ரூபாய்க்கு விற்கப்பட்ட மல்லிகையின் விலை இரண்டு மடங்காகி 800 ரூபாய்க்கு விற்பனையானது. 200 ரூபாய்க்கு விற்பனையான ஜாதிப்பூ 450 ரூபாய்க்கும், 250 ரூபாய்க்கு விற்பனையான முல்லைப் பூ 600 ரூபாய்க்கும் விற்பனையானது. வாடாமல்லி, கனகாம்பரம், பன்னீர் ரோஸ், சம்பங்கி, அரளி உள்ளிட்ட பூக்களின் விலையும் உயர்ந்ததால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

மதுரை மாட்டுத்தாவணி மலர்ச் சந்தையில் பூக்களின் வரத்து அதிகரித்ததால், விலை குறைந்தது. மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து மல்லிகை, சம்மங்கி, முல்லை, பிச்சிப்பூ உள்ளிட்ட மலர் வகைகள் அதிக அளவில் வந்து சேர்ந்தன. இதனால் கடந்த வாரம் விற்பனையான விலையில் மாற்றமின்றி, பூக்கள் விற்கப்பட்டன

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com