"மீண்டும் நடிக்க ஆசை" - நடிகை ரங்கம்மா பாட்டியின் கலங்கவைக்கும் நிலை

"மீண்டும் நடிக்க ஆசை" - நடிகை ரங்கம்மா பாட்டியின் கலங்கவைக்கும் நிலை

"மீண்டும் நடிக்க ஆசை" - நடிகை ரங்கம்மா பாட்டியின் கலங்கவைக்கும் நிலை
Published on

திரைப்படங்கள் மூலம் பலரது புன்னகைக்கும் காரணமாக அமைந்த, நடிகை ரங்கம்மா பாட்டி, தற்போது வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கிறார். தள்ளாடும் வயதிலும், தனது உயிர் மூச்சான நடிப்பை தொடரவேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார்.

முதுமையிலும் தனது வசனங்களை மறவாது, நகைச்சுவையுடன் நடித்துக் காட்டும் ரங்கம்மா பாட்டியை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. நடிகர் வடிவேலுவின் ட்ரேட் மார்க் காமெடிகளில் ஒன்றான, "ந்தா அந்த நாயைக் கொஞ்சம் சூன்னு வெரட்டிட்டுப் போ" என்று சொல்லும் ரங்கம்மா பாட்டியின் நடிப்பு அனைவராலும் பாராட்டுப் பெற்றது. ஏராளமான முன்னணி நடிகர்களுடன் நடித்த ரங்கம்மா பாட்டிக்கு தற்போது போதிய திரைப்பட வாய்ப்புகள் இல்லாததால், வறுமையில் சிக்கித் தவித்துவருகிறார். உடல்நிலை சரியில்லாமல் சென்னையில் ஆதரவின்றி இருந்த ரங்கம்மா பாட்டியை, உறவினர்கள், அவர் பிறந்த ஊரான கோவைக்கே அழைத்துச்சென்று, கவனித்து வருகின்றனர். உடல் நிலை சரியில்லாமல் இருந்தாலும் தான் மீண்டும் நடிப்பேன் என தன்னம்பிக்கையுடன் கூறுகிறார்.

ரங்கம்மா பாட்டிக்கு நடிப்பு தான் உயிர் மூச்சு. இதனால், தான் நடித்த காட்சிகளை மீண்டும் மீண்டும் பார்த்து, ரங்கம்மா பாட்டி, தினந்தோறும் தன்னை உற்சாகப்படுத்திக் கொள்கிறார். உடல் நலம் குன்றி, வறுமையில் உழல்கின்ற போதிலும், யாரிடமும் உதவியை நாடவில்லை எனக் கூறும் ரங்கம்மா பாட்டி, விருப்பமுள்ளவர்கள் உதவட்டும் என புன்னகைத்தபடியே கூறுகிறார். பல குழந்தைகளின் படிப்பிற்கு ரங்கம்மா பாட்டி உதவியுள்ளதாக, அவரது மகன் கோபால் நெகிழ்ச்சியுடன் கூறுகிறார். தங்குவதற்கு வீடு, மருத்துவம் சார்ந்த உதவி கிடைத்தால், தான் மீள்வேன் என தன்னம்பிக்கையுடன் தெரிவிக்கும் ரங்கம்மா பாட்டி, உடல் நலம் தேறி, மீண்டுவந்து மீண்டும் மக்களை மகிழ்விக்க காத்திருக்கிறார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com