புதுக்கோட்டை: உளிகொண்டு உயிரோட்டமுள்ள சிற்பங்களைத் தரும் 8-ம் வகுப்பு மாணவி
பள்ளிப்பருவத்தில் நுண்கலைகளை கற்கும் ஆர்வத்தையும், நுட்பமான கலைகள் மீது தானாகவே ஈர்ப்பு கொண்டு கற்றுக் கொள்வதையும் மிகச்சில குழந்தைகளிடமே காணமுடிகிறது. இந்த டிஜிட்டல் காலகட்டத்திலும், புதுக்கோட்டையைச் சேர்ந்த 8 ஆம் வகுப்பு மாணவி ஒருவர், அழகிய மரவேலைப்பாடுகளை செய்து அசத்தி வருகிறார்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே, மரச்சிற்பங்களைச் செய்யும் கடையை கடந்து போகும்போது வழக்கமாக பார்க்கும் காட்சி இது. சிறுமி ஒருவர், மரத்துண்டில் உளி கொண்டு அழகாக செதுக்கிக் கொண்டிருக்கிறார். செதுக்குதல், சீவுதல் என ஒரு தேர்ந்த மரச்சிற்பக் கலைஞருக்குரிய லாவகத்துடன் மரக்கட்டைகளில் வேலைப்பாடுகளை செய்து வரும் சிறுமியின் பெயர் அஞ்சனா ஸ்ரீ.
8 ஆம் வகுப்பு படிக்கும் இவர், மரச்சிற்பியான தந்தையின் கலை நுணுக்கங்களால் கவரப்பட்டு தானும் ஆர்வத்துடன் மரவேலைப்பாடுகளை செய்யத் தொடங்கினார். ஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் ஆன்லைன் வகுப்புக்குப்பிறகு மரச்சிற்பங்களை இந்தச் சிறுமி செய்து வருகிறார். வழக்கமாக பிள்ளைகள் மருத்துவம், பொறியியல் படிக்கும் கனவுகளை கொண்டிருக்கும் வேளையில் அஞ்சனாவின் கனவுகள் வித்தியாசமாக உள்ளன.
25 ஆண்டுகாலமாக மரச்சிற்ப வேலைப்பாடுகளை செய்துவரும் அஞ்சனாவின் தந்தை முத்துகுமார், தனது மகளின் ஆர்வத்தை கண்டு அவரை உற்சாகப்படுத்துகிறார். எந்த நேரமும் செல்போனும், வீடியோ கேமுமாக விளையாடி கவனச்சிதறலுக்கு ஆளாகும் பள்ளி சிறுவர், சிறுமியர் மத்தியில் உளிகொண்டு செதுக்கி பூவாக, கிளையாக, கிளியாக மரத்துண்டுகளை பேசும் மரச்சித்திரங்களாக மாற்றி அசர வைக்கிறார் மரச்சிற்பி அஞ்சனா.