நிலக்கரி மாயமானதில் அதிமுக ஆட்சியிலேயே ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?: செந்தில் பாலாஜி கேள்வி

நிலக்கரி மாயமானதில் அதிமுக ஆட்சியிலேயே ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?: செந்தில் பாலாஜி கேள்வி
நிலக்கரி மாயமானதில் அதிமுக ஆட்சியிலேயே ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?: செந்தில் பாலாஜி கேள்வி

வடசென்னை அனல்மின் நிலையம் மட்டுமல்லாமல் 3 அனல் மின் நிலையங்களிலும் நிலக்கரி கையிருப்பு குறைந்திருந்ததை அதிமுக ஆட்சி காலத்திலேயே தாங்கள் கண்டுபிடித்துவிட்டதாக முன்னாள் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். அப்படி என்றால் ஏன் அப்போதே நடவடிக்கை எடுக்கவில்லை என மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி எதிர் கேள்வி எழுப்பியுள்ளார்.

2 லட்சத்து 38 ஆயிரம் டன் நிலக்கரி காணாமல் போயுள்ளதாக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி முன்வைத்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதுதொடர்பாக முன்னாள் மின்துறை அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நிலக்கரி கையிருப்பு குறைந்திருந்ததை அதிமுக ஆட்சி காலத்திலேயே கண்டுபிடித்துவிட்டதாக தெரிவித்தார்.

2.38 லட்சம் டன் நிலக்கரி மாயமான விவகாரம் குறித்து விளக்கமளித்த முன்னாள் மின் துறை அமைச்சர் தங்கமணி, “சூரிய சக்தி மின்சாரம் நின்றுவிட்டால் அனல் மின் நிலையத்தை இயக்க வேண்டும். முழுமையாக அனல் மின் நிலையத்தை நிறுத்தினால் மீண்டும் இயக்க 8 மணி நேரம் ஆகும். அனல்மின் நிலையத்தை தொடர்ந்து இயக்குவதற்கான நிலக்கரி கணக்கில் வராமல் இருக்கும் என அதிகாரிகள் கூறினர். அதிகாரிகளின் தகவலை ஏற்றுக்கொள்ளாமல் அனைத்து அனல்மின் நிலைய இயக்குநர்களையும் எச்சரித்தோம். அப்போதே குழு அமைத்து ஆய்வு செய்தோம், நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்து இருந்தோம். ஐஏஎஸ் அதிகாரிகளிடம் விசாரிக்கட்டும், யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுப்பதை ஏற்றுக்கொள்கிறேன்” என தெரிவித்தார்

நிலக்கரி கையிருப்பு குறைந்ததை அதிமுக ஆட்சியிலேயே கண்டுபிடித்ததாக கூறும் முன்னாள் அமைச்சர் தங்கமணி, அதுதொடர்பாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என தற்போதைய மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக கேள்வி எழுப்பியிருக்கும் தமிழ்நாடு மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, “அதிமுக ஆட்சியில் முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தால் ஏன் அதை வெளியிடவில்லை. தவறு செய்த அதிகாரிகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? முந்தைய ஆட்சியில் இது கண்டுபிடிக்கப்பட்டிருந்தால் தவறு செய்தவர்களை ஏன் காப்பாற்ற வேண்டும்?. தேர்தலுக்கு முன்பாகவே குழு அமைத்திருந்தால் அந்த குழுவின் அறிக்கையை ஏன் வெளியிடவில்லை?. நிலக்கரி காணாமல் போன விவகாரம் குறித்து நேருக்கு நேர் அமர்ந்து விவாதிக்கத் தயார்” என தெரிவித்தார்

திமுக ஆட்சி அமைத்ததில் இருந்தே மின்துறை தொடர்பாக அதிமுகவுடன் கருத்து மோதல் இருந்து வந்த நிலையில், தற்போது நிலக்கரி காணாமல் போனது தொடர்பான பரஸ்பர குற்றச்சாட்டு தமிழக அரசியலில் பேசு பொருளாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com