ஆறு மாத குழந்தைக்கு 16 கோடி ரூபாய் ஊசி: பெற்றோர் கண்ணீர் போராட்டம்
தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட, ஆறு மாத குழந்தையை காப்பாற்ற, ரூ.16 கோடி மதிப்பிலான ஊசி செலுத்தியே ஆக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெற்றோர், வழியின்றி கண்ணீர் வடிக்கின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே பழைய மாமல்லபுரம் சாலை கண்ணகப்பட்டு , பகுதியை சேர்ந்த ஆண்ட்ருஸ், ஜெனிபர் தம்பதிகளுக்கு, பியோடர் டாவின் மற்றும் பியோனா டிவின் என்ற ஒரு ஆண்,ஒருபெண் என கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது.
இதில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தையை விட ஆண் குழந்தை, கை, கால்கள் முறையாக அசைவற்ற நிலையில் இருந்துள்ளதை கவனித்த பெற்றோர் குழந்தையை சென்னை எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதித்து சோதனைகள் மேற்கொண்டனர்.
அதில் குழந்தைக்கு மரபணு பாதிப்பினால் ஏற்படும் எஸ்.எம்.ஏ., என்ற தசைநார் சிதைவு நோய் இருப்பது கண்டறியப்பட்டது.
பின்னர் இதற்கான சிகிச்சை பெங்களூரிவில் உள்ளதை தெரிந்து கொண்ட பெற்றோர் குழந்தையை பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்து சோதனைகள் மேற்கொண்டனர்.
மருத்துவர்கள் 'குழந்தையின் உடலில், இல்லாத மரபணுவை ஊசியின் மூலம் செலுத்த வேண்டும். அதே சமயம், அமெரிக்காவில் தயாரிக்கப்படும் அந்த பிரத்யேக ஊசியின் விலை ரூ.16 கோடி' என தெரிவித்துள்ளனர். குறிப்பாக, இந்த ஊசியை குழந்தையின் 2 வயதிற்குள் செலுத்த வேண்டும் என கூறியுள்ளனர். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், குழந்தையின் உயிரை காப்பாற்ற உதவுமாறு,கேட்டுள்ளனர்.
மருத்துவர்கள் முதற்கட்டமாக மாதந்தோறும் வாய்வழியாக தரப்படும் மருந்துக்கு பரிந்துரை செய்துள்ளனர். அதற்கு மாதம் 6 லட்ச ருபாய் செலவாகும் என தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் குழந்தையை காப்பாற்ற ரூ.16 கோடி' மதிப்பிலான பிரத்யேக ஊசி போட்டே ஆக வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் ஆண்ட்ருஸ் இவ்வளவு தொகையை சேகரிக்க முடியாமல் திணறுகிறார். இதனால் குழந்தையை காப்பாற்ற தமிழக அரசு உதவ பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.