"2011 மக்கள் தொகை அடிப்படையில் தடுப்பூசிகளைப் பெறுக": ஓபிஎஸ் வலியுறுத்தல்
2011ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் கொரோனா தடுப்பூசிகளைப் பெற நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கும் அவர், இந்த ஆண்டு இறுதிக்குள் 96 கோடி டோஸ் தடுப்பூசிகளை கொள்முதல் செய்து அனைத்து மாநிலங்களுக்கும் விநியோகிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்திருப்பது பாராட்டுக்குரியது என்று கூறியுள்ளார். இவ்வாண்டு இறுதிக்குள் மத்திய அரசால் கொள்முதல் செய்யப்படவிருக்கும் தடுப்பூசிகளில் தமிழ்நாட்டு மக்கள் தொகை அடிப்படையில் 6 கோடியே 33 லட்சத்து 43 ஆயிரத்து 935 தடுப்பூசிகளை பெற்று, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்ற இலக்கினை எய்த வேண்டியது அரசின் கடமை என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி இருக்கிறார். முதலமைச்சர் இதில் தனிக்கவனம் செலுத்தி, புள்ளி விவரங்களை பிரதமரிடம் நேரில் எடுத்துரைத்து, குறைந்தபட்சம் 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் தடுப்பூசிகளை பெற நடவடிக்கை எடுக்குமாறு ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

