”60% ஆஃபர் இருக்கு... ஓகேவா எலான்?”-ப்ளூ டிக் விவகாரத்தில் ஸொமேட்டோ போட்ட ட்வீட் படுவைரல்!

”60% ஆஃபர் இருக்கு... ஓகேவா எலான்?”-ப்ளூ டிக் விவகாரத்தில் ஸொமேட்டோ போட்ட ட்வீட் படுவைரல்!
”60% ஆஃபர் இருக்கு... ஓகேவா எலான்?”-ப்ளூ டிக் விவகாரத்தில் ஸொமேட்டோ போட்ட ட்வீட் படுவைரல்!

ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கிய நிலையில் பல அதிரடி மாற்றங்களை அங்கு அவர் கொண்டு வருகிறார். ஏற்கெனவே ட்விட்டரின் ceo ஆக இருந்த பராக் அக்ரவால் உட்பட இதர மூன்று மூத்த அதிகாரிகளையும் எலான் மஸ்க் பணி நீக்கம் செய்திருந்தார்.

அதேபோல இதுகாறும் இருந்து வந்த எங்கிருந்தாலும் வேலை பார்க்கலாம் (work from anywhere) என்ற நடைமுறையை நீக்கி பணியாளர்களை அனைவரையும் அலுவலகம் வந்து வேலை பார்க்கும்படி உத்தரவிட்டுள்ள எலான், ஆயிரக்கணக்கான ஊழியர்களையும் பணி நீக்கம் செய்யப்போவதாகவும் கூறி பலரது வயிற்றிலும் புளியை கரைத்துக் கொண்டிருக்கிறார்.

இதுபோக, ட்விட்டர் செயலியை பயன்படுத்தும் பயனர்களுக்கு verified account வேண்டுமென்றால் `8 டாலர் (660 ரூபாய்) மாதாமாதம் கட்ட வேண்டும்’ என காட்டமாகவே தெரிவிக்கும் வகையில் பல மீம் பதிவுகளையும் பகிர்ந்து வருகிறார்.

ப்ளூ டிக் வாங்குவதற்கு காசு கட்ட வேண்டும் என்ற மஸ்கின் அறிவிப்பால் ட்விட்டர் பயனர்கள் பலரும் புலம்பித்தள்ளி வருகிறார்கள். இந்த நிலையில் இந்தியாவின் பிரபல ஆன்லைன் ஃபுட் டெலிவரி நிறுவனமான ஸொமேட்டோ ட்விட்டர் ப்ளூ டிக்கிற்காக எலான் மஸ்கிடம் பேரம் பேசுவது போன்று ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறது.

அதில், “ஓகே எலான், 8 டாலருக்கு 60% ஆஃபர் போக 5 டாலர் போதுமா?” என ஸொமேட்டோ பதிவிட்டிருக்கிறது. இந்த பதிவைக் கண்ட நெட்டிசன்கள் பலரும் பேரம் பேசுவதில் இந்தியர்களுக்கு சளைத்தவர்கள் வேறு எவரும் இல்லை என பதிவிட்டிருக்கிறார்கள்.

இதுபோக, “டிசம்பர் 31க்குள் பணத்தை கட்டிவிட்டால் 10% ஆஃபரும் சேர்த்து கிடைக்கும்” என்றும், “டெலிவரி சார்ஜ், டாக்ஸ், டொனேஷன் என எல்லா கட்டணத்தையும் சேர்த்தால் 10 டாலர் வந்துவிடும்” என்றும் கிண்டல் செய்து ட்வீட்டியிருக்கிறார்கள்.

இதேபோல, ப்ளூ டிக் விவகாரம் குறித்து தமிழ் திரைப்பட நடிகர் சிபி சத்யராஜ் “கூகுள் பே நம்பர் அனுப்புங்கள்” என எலான் மஸ்க்கின் ட்வீட்டை ரீவீட் செய்திருந்ததும் வைரலானது.

முன்னதாக, ட்விட்டரில் அதிகாரப்பூர்வ கணக்கு என்பதற்கான ப்ளூ டிக் பெற்றிருந்தால் 20 டாலர் என எலான் மஸ்க் நிர்ணயித்திருந்தார். ஆனால் அமெரிக்காவின் பிரபல எழுத்தாளரான ஸ்டீஃபன் கிங் எதிர்ப்பு தெரிவித்து பதிவிட்ட நிலையில்தான் 8 டாலர் என மஸ்க் குறைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com