அதிர்ச்சி: குடிபோதையில் சாஹலை 15வது மாடி பால்கனியிலிருந்து தொங்கவிட்ட வீரர்

அதிர்ச்சி: குடிபோதையில் சாஹலை 15வது மாடி பால்கனியிலிருந்து தொங்கவிட்ட வீரர்
அதிர்ச்சி: குடிபோதையில் சாஹலை 15வது மாடி பால்கனியிலிருந்து தொங்கவிட்ட வீரர்

ஐபிஎல் தொடரின் போது யுஸ்வேந்திர சாஹலை 15-வது மாடி பால்கனியிலிருந்து வீரர் ஒருவர் மதுபோதையில் தொங்கவிட்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான யுஸ்வேந்திர சாஹல், தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஆடி வருகிறார். இந்த நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு அளித்த பேட்டியில், குடிபோதையில் ஒரு வீரர் செய்த பழைய சம்பவம் ஒன்றை சொல்லி அதிர்ச்சியடைய வைத்துள்ளார் சாஹல்.

இந்த வீடியோவை ராஜஸ்தான் ராயல்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அந்த வீடியோவில் சாஹல் கூறுகையில், ''நிறைய பேருக்கு இந்த சம்பவம் குறித்துத் தெரியாது. அது 2013ஆம் ஆண்டு. அப்போது நான் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆடிக் கொண்டிருந்தேன். பெங்களூரில் ஒரு போட்டி. அது முடிந்ததும் கெட்-டூ-கெதர் வைத்திருந்தனர். அப்போது ஒரு வீரர் நன்றாக குடித்திருந்தார். அவரது பெயரைச் சொல்ல விரும்பவில்லை. அவர் தன்னிலையிலேயே இல்லை. என்னைப் பார்த்த அவர் அருகில் கூப்பிட்டார். பின்னர் அருகில் இருந்த பால்கனிக்கு அழைத்துச் சென்ற அவர் என்னை அப்படியே தூக்கி பால்கனியிலிருந்து தொங்க விட்டார். எனக்கு உயிரே போனது போல ஆகி விட்டது.

அது 15வது மாடி. எனது கைகள் அவரது கைகளை இறுக்கமாக பிடித்திருந்தன. கொஞ்சம் நழுவினாலும் அவ்வளவுதான். அதேபோல அவர் நழுவ விட்டாலும் நான் செத்தேன். அந்த சமயத்தில் வேறு சில வீரர்கள் இதைப் பார்த்து விட்டு ஓடி வந்து அந்த வீரரிடமிருந்து என்னை மீட்டனர். எனக்கு மயக்கமே வந்து விட்டது. என்னை அமர வைத்து குடிக்க தண்ணீர் கொடுத்தனர். நான் மயிரிழையில் உயிர் தப்பினேன் என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்த சம்பவத்திலிருந்து நான் தெரிந்து கொண்டது, நாம் எங்கிருந்தாலும், என்ன நிலையில் இருந்தாலும் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ளவேண்டும் என்பதே. அந்த சமயத்தில் நானோ அல்லது அந்த வீரரோ சிறு தவறு செய்திருந்தாலும் எனது உயிரே போயிருக்கும்'' என்றார் யுஸ்வேந்திர சாஹல்.

யுஸ்வேந்திர சாஹல் உயிருடன் விளையாடிய அந்த வீரர் யார் என்பது தெரியவில்லை. சஹாலும் கூறவில்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com