ஆந்திர மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்: ஜெகன் மோகன் ரெட்டி!
ஆந்திர மாநில மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார்கள் என்று ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டித் தெரிவித்தார்.
மக்களவைத் தேர்தல் இன்று தொடங்கி, மே 19 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடக்கிறது. முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியுள்ளது. 20 மாநிலங்களில் உள்ள 91 மக்களவைத் தொகுதிகளுக்கு முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. அதோடு, ஆந்திரா, அருணாசல பிரதேசம், சிக்கிம், ஒடிசா ஆகிய 4 மாநில சட்டப்பேரவைகளுக்கும் வாக்குப் பதிவு இன்று தொடங்கியுள்ளது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
ஆந்திராவில் நடைபெறும் தேர்தலில் 25 மக்களவைத் தொகுதிகளில் 319 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதே போல மொத்தமுள்ள 175 சட்டப்பேரவைத் தொகுதியில் 2,118 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். குப்பம் தொகுதியில் போட்டியிடும் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, மகன் நாரா லோகேஷ், மனைவி நாரா புவனேஷ்வரி உட்பட குடும்பத்தினருடன் அமராவதியில் வாக்களித்தார்.
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, கடப்பாவில் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘’ஆந்திர மாநில மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார்கள். அதனால் நாங்கள் வெற்றி பெறுவது உறுதி. அனைவரும் பயமின்றி வந்து வாக்களிக்க வேண்டும்’’ என்று கூறினார்.