
சிறுவயதில் பானி பூரி விற்ற சிறுவன்.. அதீத முயற்சியால் 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய கிரிக்கெட் அணியில் வாய்ப்பு கிடைத்தது மட்டுமல்லாமல், ஐபிஎல் டி20 தொடரில் ராஜஸ்தான் அணியிலும் இன்று விளையாட இருக்கிறார் யாஷ்வி ஜெய்ஸ்வால். 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை இறுதி ஆட்டம் வரை இந்தியா சென்றாலும் கோப்பையை வெல்லவில்லை. ஆனால் அந்தத் தொடர் முழுவதுமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் யாஷ்வி ஜெய்ஸ்வால். அதுவும் அரையிறுதியில் சதமடித்து அனைவரையும் கவர்ந்தார் அவர்.
அதற்கு பரிசாகவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணி யாஷ்வி ஜெய்ஸ்வாலை ரூ2.40 கோடி ஏலம் எடுத்தது. ஐபிஎல் தொடரின் இன்றையப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காகவும் சிஎஸ்கே அணிக்கு எதிராகவும் தொடக்க வீரராக யாஷ்வி ஜெய்ஸ்வால் களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. உத்தரப்பிரதேச மாநிலம், பதோகி அருகே சூர்யா நகரைச் சேர்ந்தவர் யாஷ்வி ஜெய்ஸ்வால்.
இவரின் தந்தை சிறிய கடை நடத்தி வருகிறார். தன்னுடைய 11-வயதில் மும்பைக்குப் குடிபெயர்ந்தார் ஜெய்ஷ்வால். அவர் மும்பை மாநகருக்கு வந்த நோக்கமே கிரிக்கெட்டில் எப்படியாவது மிகப்பெரிய வீரராக உருவாக வேண்டும் என்பதுதான். ஆனால், அவருக்கு மும்பையில் எதுவும் எளிதாக கிடைக்கவில்லை. முஸ்லிம் யுனைடெட் மைதானம் அருகே பிளாஸ்டி தார்ப்பாயில் ஒரு குடிசை அமைத்து ஜெய்ஸ்வால் தங்கி, பெரும்பாலான நேரங்களில் பானிபூரி தயாரிக்கும் கடையில் வேலை பார்த்துள்ளார்.
மீதமுள்ள நேரத்தில் கடுமையாக கிரிக்கெட் விளையாடிய ஜெயஸ்வாலை, பயிற்சியாளர் கண்டுகொண்டு மும்பையின் கில்ஸ் ஷீல்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாட ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்தப் போட்டியில் 319 ரன்களை ஜெய்ஸ்வால் விளாசினார். இது நடந்தது 2015-இல். அதன்பின் நடந்த விஜய் ஹசாரே போட்டியில் (லிஸ்ட் ஏ) ஜெய்ஸ்வால் 154 பந்துகளில் 203 ரன்கள் சேர்த்து அனைவரின் கவனத்தையும் ஜெய்ஸ்வால் ஈர்த்துள்ளார்.
இதையடுத்து 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் விளையாட இடம் கிடைத்தது. இப்போது பலம் வாய்ந்த சிஎஸ்கே அணிக்கு எதிராக இன்று களம் காண்கிறார் யாஷ்வி ஜெய்ஸ்வால்.