வீட்டில் ஒருவருக்கு வேலை, நெல்லுக்கு ஆதாரவிலை ரூ.3000: தினகரன் தேர்தல் அறிக்கை
அமமுக ஆட்சிக்கு வந்தால் வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வழங்கப்படும், நெல்லுக்கு குவிண்டாலுக்கு மூவாயிரம் ரூபாய் வரையும், கரும்பு ஒரு டன்னுக்கு நான்காயிரம் ரூபாயாகவும் குறைந்தபட்ச ஆதாரவிலை நிர்ணயிக்கப்படும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வாக்குறுதி அளித்துள்ளார்.
அமமுகவின் தேர்தல் அறிக்கையை தினகரன் வெளியிட்டார். 63 பக்கங்கள் கொண்ட தேர்தல் அறிக்கையில், விவசாயிகள், நெசவாளர்கள் நலன் உள்ளிட்ட நூறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அதில், அம்மா பொருளாதார புரட்சித் திட்டம் என்ற பெயரில் வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இனிமேல் மதுபான ஆலைகளுககு அனுமதியில்லை என உடனடியாக கொள்கை முடிவெடுக்கப்பட்டு, ஏற்கனவே உள்ள மதுபான ஆலைகள் படிப்படியாக மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
உரம் உள்ளிட்ட இடுபொருள்கள் மானியத்துடன் விவசாயிகளின் வீடு தேடி வழங்கப்படும் என்றும், நெல்லுக்கு குவிண்டாலுக்கு மூவாயிரம் ரூபாய் வரையும் கரும்பு ஒரு டன்னுக்கு நான்காயிரம் ரூபாயாகவும் குறைந்தபட்ச ஆதாரவிலை நிர்ணயிக்கப்படும் என்று அமமுகவில் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்களைப் போலவே, அரசு கல்லூரி மாணவர்களுக்கும் இலவச பஸ் பாஸ் வழங்கப்படும் என்றும், மூத்த குடிமக்களுக்கு அரசு பேருந்துகளில் 50 சதவிகிதம் கட்டணச் சலுவை வழங்கப்படும் என தெரிவிக்கப்படுள்ளது. கிராமப்புறத் தொழில்வளர்ச்சியை ஊக்குவிக்க, குறைந்தது 5 பொறியியல் பட்டதாரிகள் இணைந்த ஒரு குழுவுக்கு 25 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.

