பெண்கள் போராடுவது ஃபேஷனாகி விட்டது: முதல்வர் கருத்து
திருப்பூரில் மதுபானக் கடைக்கு எதிராக போராட்டம் நடத்திய பெண்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறை அதிகாரி மீது எந்த புகாரும் பதிவாகாததாலேயே அவருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய, சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் ராமசாமி, டாஸ்மாக் கடைகளால் ஏற்படக் கூடிய சட்டம் ஒழுங்கு பிரச்னைகளுக்கு அரசு தீர்வு காணவேண்டும் என கேட்டுக்கொண்டார். அதற்கு பதலளித்துப் பேசிய மின்துறை மற்றும் மதுவிலக்குத்துறை அமைச்சர் தங்கமணி, அதிமுக. அரசு பதவியேற்ற பிறகு ஆயிரம் கடைகள் மூடப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுப்படி, மூவாயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டது. 6 ஆயிரத்திக்கும் மேற்பட்ட கடைகள் இருந்த போது ஏற்படாத சட்டம் ஒழுங்கு பிரச்னை தற்போது ஏற்படுவதற்கு எதிர்கட்சிகளின் தூண்டுதல்தான் காரணம் என்று அமைச்சர் கூறினார். அப்போது பேசிய காங்கிரஸ் உறுப்பினர் திருப்பூரில் மதுக்கடைக்கு எதிராக போராடிய பெண்ணை நடு ரோட்டில் நேரடியாக காவல்துறை அதிகாரியே தாக்கிய சம்பவத்தை சுட்டிக்காட்டினார். அதற்கு பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மதுக்கடைகளுக்கு எதிராக வேண்டுமென்றே சில எதிர்கட்சியினர் போராட்டங்களை தூண்டிவிடுகின்றனர். திட்டமிட்டு குழந்தைகள், பெண்களை வைத்து போராட்டம் நடத்துவது தற்போது ஃபேசன் ஆக உள்ளது. திருப்பூர் பெண் தாக்கப்பட்ட சம்பவத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிமீது இதுவரை எந்த புகாரும் இல்லை என்றும், அதனால் தான் அவருக்கு பதவி உயர்வு கொடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். எனினும் இந்த சம்பவம் நடைபெற்றது வருத்தமளிக்கிறது என முதலமைச்சர் விளக்கமளித்தார்.