70 அடி ஆழக் கிணற்றில் தவறி விழுந்த பெண்... உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்
தாராபுரம் அருகே 70 அடி ஆழக் கிணற்றில் தவறி விழுந்த பெண்ணை தீயணைப்புத்துறையினர் உயிருடன் மீட்டனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள டி.காளிபாளையம், காந்திஜி நகரைச் சேர்ந்த கந்தையா என்பவரின் மகள் கலா. இவர், இன்று மாலை காந்திநகர் அரசு நடுநிலை பள்ளி அருகே உள்ள 70 அடி ஆழ ஊர் பொதுக் கிணற்றில் எவ்வளவு நீர் இருக்கிறது என்று எட்டி பார்த்தபோது திடீரென கிணற்றுக்குள் தவறி விழுந்துவிட்டார்.
கிணற்றில் 20அடி அளவு நீர் இருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அவரது கூச்சலைக் கேட்டு, அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து தாராபுரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் கலாவை உயிருடன் மீட்டனர்.
பிறகு கலாவை முதலுதவி சிகிச்சைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் மருத்துவ பரிசோதனையில் இருந்து வருகிறார. மேலும் இதுகுறித்து தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காந்திநகர் பகுதியில் உள்ள ஊர் பொது கிணற்றிற்கு மூடி அமைத்து தரவேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.