பிறந்து 20 நாட்களே ஆன ஆண்குழந்தை ரூ.80 ஆயிரத்துக்கு விற்பனை: 3 பேர் கைது
பொள்ளாச்சி அருகே பிறந்து 20 நாட்களே ஆன ஆண் குழந்தையை 80 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை பெண் இடைத்தரகர் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை, செட்டிபாளையத்தை சேர்ந்தவர் ராஜேஷ்குமார். இவரது மனைவி கோகிலா. இந்த தம்பதிக்கு நீண்ட நாட்களாக குழந்தை இல்லை. இந்நிலையில் தங்களுக்கு குழந்தை விலைக்கு வேண்டும் என்று இவரது நண்பரான பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் புலியங்கண்டியை சேர்ந்த பௌலினா என்ற பெண்ணை அணுகியுள்ளனர்.
இதனையடுத்து அங்கலக்குறிச்சியை சேர்ந்த சலவைத் தொழிலாளி முருகவேல் - சுதா தம்பதியினருக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இதை தெரிந்து கொண்ட பௌலினா அவர்களை தொடர்பு கொண்டு குழந்தையை விலைக்கு கேட்பதாக கூறியுள்ளார். அதற்கு குழந்தையின் பெற்றோரும் சம்மதித்துள்ளனர். பின்னர் ராஜேஷ்குமார் கோகிலா, பௌலினா ஆகிய மூவரும் ரூ.80 ஆயிரம் கொடுத்து குழந்தையை வாங்கி கொண்டு வந்து விட்டனர்.
இதுகுறித்து அக்கம் பக்கத்தில் வசிக்கும் பொதுமக்கள் கோவை குழந்தைகள் நல அலுவலகத்திற்கு புகார் தெரிவித்தனர். இதனையடுத்து அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் ஆழியார் காவல்நிலைய போலீசார், குழந்தையை விலைக்கு வாங்கிய ராஜேஷ்குமார் அவரது மனைவி கோகிலா மற்றும் இடைத்தரகராக இருந்த பௌலினா உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் குழந்தைகளை இடைத்தரகர்கள் வைத்து விற்பனை செய்வதை தொழிலாக செய்து வருகிறார்களா? என்பது குறித்தும் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.