“பெண்கள்தான் 2019 மக்களவை தேர்தலை தீர்மானிப்பார்கள்?”- புள்ளிவிவரம்
மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைய உள்ளது. எனவே ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கான முன்னேற்பாட்டுகளை தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. இந்தத் தேர்தலில் பெண்களின் பங்களிப்பு எவ்வாறு இருக்கும் என்பதை பார்க்கலாம். அதற்குமுன் முந்தைய தேர்தல்களில் பெண்களின் பங்களிப்பு பற்றி தெரிந்துகொள்வோம்.
இந்தியா சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகாலம் ஆகியும் குறைவான பெண்களே அதிகாரபகிர்வில் இருத்திருக்கிறார்கள். அதாவது பெண்கள் மிகவும் குறைந்த அளவிலே நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிடுகின்றனர். நாட்டின் மக்கள்தொகையில் பாதி அளவில் பெண்கள் உள்ளனர். இதன்படி பார்த்தால் மொத்த மக்கள் தொகையில் 1/12 பெண்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிடுகின்றனர். அதில் 1/10 பெண்கள் மட்டுமே வெற்றி பெறுகின்றனர். இதுவரை பெண்கள் எவ்வாறு தேர்தல்களில் செயல்பட்டிருக்கின்றனர் என்பதை மூன்று வகைகளில் பார்க்கலாம். அவை:
வேட்பாளர்களாக களத்தில் பெண்கள்:
கடந்த 2014 மக்களவை தேர்தலில் 8.1% பெண்கள் வேட்பாளர்களாக போட்டியிட்டனர். இது கடந்த காலங்களை விட மிகவும் அதிகமான அளவு என்று தரவுகள் தெரிவிக்கின்றன. அதேபோல, கடந்த 1980-2014 வரை பட்டியலினத்தவர்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் 7% பெண்கள் வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். இது இந்தக் கால அளவில் பொதுப்பிரிவில் (4.8%) போட்டியிட்ட எண்ணிக்கையைவிட அதிகமாகும்.
மேலும் பெண் வேட்பாளர்கள், பெண்களின் எண்ணிக்கை குறைந்துள்ள மாநிலங்களிலேயே அதிகம் போட்டியிடுவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. உதாரணமாக பாலின விகிதம் குறைந்த அளவில் உள்ள உத்திரப்பிரதேசத்தில் அதிக பெண்கள் போட்டியிடுகின்றனர் என்கிறது தரவு.
ஆனால் பெண் பாலின விகிதம் அதிக அளவில் உள்ள கேரளாவில் குறைந்த பெண்கள் போட்டியிடுகின்றனர். இந்தத் தரவுகளின்படி பார்த்தால் பெண்கள் அதிக அளவில் பட்டியலின தொகுதிகளிலேயே இவர்கள் போட்டியிடுகின்றனர் என்கிறனர் ஆய்வாளர்கள்.
மக்கள் பிரதிநிதியாக பெண்கள்:
கடந்த 2014 மக்களவை தேர்தலில் 11.4% பெண் எம்பிக்கள் வெற்றி பெற்றிருந்தனர். ஆனால் மொத்த மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையில் பார்த்தால் பெண் எம்பிக்கள் மிகவும் குறைந்த அளவே. அதேபோல, கடந்த 1980 தேர்தல்களிலிருந்து பொது தொகுதிகளைவிட பட்டியிலினத்தவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளிலே பெண் எம்.பிக்கள் அதிகம் வெற்றிப் பெற்றிருக்கின்றனர். அதாவது 16.2% பெண் எம்.பிக்கள் பட்டியலினத்தவர் தொகுதிகளிலும் 11.5% பெண் எம்பிக்கள் பொது தொகுதிகளிலும் வெற்றிப்பெற்றிருக்கின்றனர்.
வாக்காளர்களாக பெண்கள்:
பெண்களின் எண்ணிக்கை வேட்பாளர்கள் மற்றும் எம்பிக்களில் குறைந்திருந்தாலும் தேர்தலில் வாக்களிப்பதில் அவர்களின் பங்கு அதிகரித்துகொண்டே வருகிறது என்கிறது ஒரு புள்ளிவிவரம். கடந்த 2014ல் 66.4% வாக்களர்கள் வாக்களித்துள்ளனர். இந்தத் தேர்தலில் 46.45% பெண்கள் வாக்களித்துள்ளனர். இது கடந்த தேர்தல்களைவிட மிக அதிகமாகும்.
அதிகரித்து கொண்டிருக்கும் பெண் வாக்களர்களின் பங்களிப்பு வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் எதிரொலிக்கும் என்றும் அனைவரும் எதிர்பார்க்கின்றனர். இதனால் பெண் வாக்காளர்கள் இந்தத் தேர்தலில் ஆண்களை விட அதிக அளவில் வாக்களிப்பர் என அரசியல் ஆர்வலர்கள் கணிக்கின்றனர்.
அதற்கேற்றவாரே அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளும் இருக்கும் என்றும் இவர்கள் கருதுகின்றனர். அரசியல் கட்சிகள் இந்தத் தேர்தலில் பெண்களின் பிரச்னைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய நிலை உருவாக்கும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
இந்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பெண்களின் பங்கு அதிக அளவில் இருந்தால், அவர்களே அடுத்து அமையபோகும் அரசை தீர்மானிக்கும் சக்தியாக இருப்பார்கள். அதனால் இந்தத் தேர்தல் மிகவும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாக இருக்கும் என்கிறனர் அரசியல் வல்லுநர்கள்.