தமிழ்நாட்டில் நல்லதொரு அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவோம்: ரஜினி
தமிழ்நாட்டில் நல்லதொரு அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவோம் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
ரஜினி அரசியலில் குதிப்பார் என நீண்ட காலமாகவே எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், கடந்த டிசம்பர் 31ஆம் தேதி அரசியல் பயண அறிவிப்பை அவர் வெளியிட்டார். வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாகவும் கூறினார். இன்னும் கட்சியின் பெயர் மற்றும் கொடி ஆகியவை அறிவிக்கப்படாத நிலையில், உறுப்பினர்களை சேர்ப்பதில் தீவிரம் காட்டி வருகிறார் ரஜினிகாந்த். அதன்தொடர்ச்சியாக இதுவரை ரஜினி ரசிகர் மன்றம் என அழைக்கப்பட்டு வந்த ரஜினியின் அதிகாரப்பூர்வ ரசிகர் மன்றம், ‘ரஜினி மக்கள் மன்றம்’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ரஜினிகாந்த் மக்கள் மன்றத்தின் வேலூர் மாவட்ட நிர்வாகிகளும் அண்மையில் நியமனம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில் நெல்லையில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அதில் ரஜினிகாந்த் பேசிய ஆடியோ வெளியிடப்பட்டது. ஆடியோவில் பேசிய ரஜினி, தமிழ்நாட்டில் மிகப்பெரிய நல்லதொரு அரசியல் மாற்றத்தை கொண்டு வருவோம் என்றார். மேலும், ஒழுக்கம், கண்ணியத்துடன் ரசிகர்கள் நல்ல ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் எனவும் ரஜினி கேட்டுக்கொண்டார்.
முன்னதாக நேற்று தூத்துக்குடியில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அதில் வெளியிடப்பட்ட ஆடியோவில் பேசிய ரஜினி, அரசியல் என்பது பொதுநலம், சுயநலமல்ல என்றும் மக்களுக்கு நல்லது செய்வது மட்டுமே நமது நோக்கம் என்றும் ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார்.