மத்திய அமைச்சரவையில் இடம்பெறுகிறார் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்?

மத்திய அமைச்சரவையில் இடம்பெறுகிறார் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்?

மத்திய அமைச்சரவையில் இடம்பெறுகிறார் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்?
Published on

மீண்டும் ஆட்சியை பிடித்துள்ள பாஜக தலைமையிலான கூட்டணியில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமாருக்கு மத்திய அமைச்சராக வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

தமிழகத்தில் வேலூர் மக்களவைத் தொகுதி நீங்கலாக 38 தொகுதிகளுக்கு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 23ம் தேதி நடைபெற்றது. தேர்தல் நடைபெற்ற 38 தொகுதிகளில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் 37 தொகுதிகளில் வெற்றி பெற்றனர். அதிமுக சார்பில் தேனி தொகுதியில் போட்டியிட்ட துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் மட்டும் வெற்றி வாகை சூடியுள்ளார். 

அதிமுக அங்கம் வகிக்கும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியை தக்க வைத்துள்ளது. நரேந்திர மோடி மே 30 அன்று இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்கிறார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளார்.

மேலும், மத்திய அமைச்சரவை பட்டியல் விரைவில் குடியரசுத் தலைவரிடம் கொடுக்கப்படும் என்றும் மோடி கூறியுள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பிக்கள் கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி இன்று கலந்து கொண்டார். அதேபோல், குடியரசுத் தலைவரை சந்திக்க செல்லும் போது அவர் உடன் சென்றார். 

தமிழகத்தில் அதிமுக வசம் உள்ள ஒரே எம்.பி ஆன ஓ.பி.ரவீந்திரநாத் குமார் அமைச்சரவையில் இடம்பெறுவதற்கான முயற்சிகள் நடைபெறுவதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஓபிஎஸ் மற்றும் மகன் ரவீந்திரநாத் இருவரும் வாரணாசியில் மோடியின் பிரச்சாரத்தில் பங்கேற்றனர். மோடி வேட்பு மனுத் தாக்கல் செய்யும் போது ஓபிஎஸ் உடனிருந்தார். 

ரவீந்திரநாத் தேர்தலில் வெற்றி பெற்றால் நிச்சயம் அமைச்சரவையில் வாய்ப்பு கொடுக்கப்படும் என பாஜக தரப்பில் ஏற்கனவே உறுதிமொழி அளித்திருந்ததாக கூறப்படுகிறது. பாஜக சார்பில் போட்டியிட்ட பொன்.ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் வேட்பாளர் ஹெச்.வசந்தகுமாரிடம் தோல்வியுற்று அமைச்சர் பதவியையும் இழந்துள்ளார். அதேபோல், பாஜகவின் ஹெச்.ராஜா, தமிழிசை மற்றும் சிபிஆர் மூவரும் தோல்வியை அடைந்தனர். அதனால், தமிழகத்தில் இருந்து அமைச்சரவையில் இடம்பெறுவதற்கான வாய்ப்பு தேனியில் வெற்றி பெற்ற ரவீந்திரநாத் குமாருக்கு அதிக அளவில் இருப்பதாகவே பேசப்படுகிறது.

நரேந்திர மோடி பதவியேற்பு விழாவின் போது முக்கியமான அமைச்சர்தான் பதவியேற்பார்கள். இந்தப் பட்டியலில் அவரது பெயர் வரவாய்ப்பில்லை. இரண்டாம் கட்டமாக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் போது அதில் ரவீந்திரநாத் பெயர் வரவாய்ப்புள்ளதாக தெரிகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com