
நோட்டாவை விட குறைவாக ஓட்டு வாங்கும் பாஜகவினருக்கு ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஏன் இவ்வளவு மரியாதை கொடுக்கிறார்கள் என்று மக்கள் தமிழ் தேசம் கட்சியின் ராஜகண்ணப்பன் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னாள் அமைச்சரான ராஜகண்ணப்பன் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவிற்கு ஆதரவு அளிக்கவுள்ளதாக இன்று அறிவித்தார். அதனையடுத்து, சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை ராஜகண்ணப்பன் சந்தித்தார். இந்தச் சந்திப்பின் போது அவரது ஆதரவாளர்கள் சிலரும் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராஜகண்ணப்பன், “அதிமுகவை பாஜகவிடம் அடகு வைத்துவிட்டனர்; அதிமுகவில் தற்போது இருப்பவர்கள் தொண்டர்கள் இல்லை. ஆளுமையற்ற ஓபிஎஸ்-ஈபிஎஸ் தலைமையில் செயல்பட முடியவில்லை. அதனால், மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைந்துள்ள மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவு அளிக்க வந்தேன். தென் மாவட்டங்கள் திராவிட இயக்கத்தின் பூமி. அங்கு பாஜகவினருக்கு அதிக தொகுதிகளை ஒதுக்கி இருக்கிறார்கள்.
அதிமுகவில் உட்கட்சி பூசல் நிறையவே இருக்கிறது. ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையிலே கருத்து முரண்பாடு இன்னும் உள்ளது. நோட்டாவை விட குறைவாக ஓட்டு வாங்குபவர்களுக்கு ஏன் இவ்வளவு மரியாதை கொடுக்கிறார்கள். பாஜக தமிழகத்தில் என்ன ஓட்டு வங்கி உள்ளது. கொங்கு மண்டலத்திலுள்ள தொகுதிகளை தக்க வைத்துள்ளார். ஆனால், தென் மாவட்டங்களிலுள்ள தொகுதிகளை பாஜவினருக்கு தாரை வார்த்துவிட்டார்கள்.
ஓபிஎஸ் - ஈபிஎஸ் தங்கள் சுயநலத்திற்காக பாஜவினருக்கு 5 தொகுதிகளை ஒதுக்கியுள்ளார்கள். அதுவும் தென்மாவட்டங்களில் வரிசையாக 4 தொகுதிகளை ஒதுக்கியுள்ளார். ஒரு குடும்பத்தின் ஆதிக்கத்திற்கு எதிராக தர்மயுத்தம் நடத்திய ஓபிஎஸ் தன்னுடைய மகனுக்கு தொகுதி வழங்கியது எப்படி?. கன்னியாகுமரி முதல் கிருஷ்ணகிரி வரை திமுக கூட்டணிக்காக பிரச்சாரம் மேற்கொள்வேன். நீட் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் தமிழகத்திற்கு எதிராக பிரதமர் மோடி உள்ளார்” என்று கூறினார்.