“கோவை சரளா எங்களை நேர்காணல் செய்வதா?” - கமல் கட்சியிலிருந்து விலகியவர் சாடல்

“கோவை சரளா எங்களை நேர்காணல் செய்வதா?” - கமல் கட்சியிலிருந்து விலகியவர் சாடல்
“கோவை சரளா எங்களை நேர்காணல் செய்வதா?” - கமல் கட்சியிலிருந்து விலகியவர் சாடல்

கோவை சரளாவை வைத்து வேட்பாளர் நேர்காணல் நடத்துவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகிய குமரவேல் கூறியுள்ளார். 

மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து விலகிய குமரவேல் சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது, “யாரும் போட்டியிட முன்வராததால் கடலூரில் போட்டியிட முன் வந்தேன். கடலூரில் பணியை தொடங்கும்படி மையக்குழுவில் இருந்தவர் சொன்னதால் தொடங்கினேன். நேர்காணலில் நான் பங்கேற்கவில்லை எனக் கூறுவது தவறானது. நான் பங்கேற்றேன். மக்கள் நீதி மய்யத்திலிருந்து நான்தான் விலகினேன். கட்சி என்னை நீக்கவில்லை. மக்கள் நீதி மய்யம் முன்னேற வேண்டும் என்றுதான் எனக்கு ஆசை. நான் முன்னேற வேண்டும் என்று நினைக்கவில்லை. 

கட்சியில் சேர்த்த ஒருவாரத்தில் கோவை சரளாவை செயற்குழு உறுப்பினராக்கியதை ஏற்க முடியவில்லை. அதேபோல், கோவை சரளாவை வைத்து வேட்பாளர் நேர்காணல் நடத்துவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மக்கள் நீதி மய்யத்தில் செயல் ஒருவிதமாகவும், களநிலவரம் வேறு விதமாகவும் உள்ளது. 

மாற்று அரசியலை எதிர்பார்த்து மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தேன். ஆனால், இங்கும் அப்படியேதான் இருக்கிறது. மக்கள் நீதி மய்யம் கட்சி முரணாக உள்ளது. கட்சியில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதால் ராஜினாமா செய்தேன். தவறான வழிநடத்துதால் கமல்ஹாசன் தவறான முடிவுகளை எடுக்கிறார். கமல் இன்னும் முழுநேர அரசியல்வாதியாக ஆகவில்லையோ என்ற எண்ணம் என்னைப்போன்ற சிலருக்கு உண்டு. சினிமா, அரசியல் என இரண்டு பாதைகளில் செல்கிறார். நான் ஓராண்டாக கட்சியில் உள்ளேன். ஆனால், கமலின் செல்போன் எண் கூட என்னிடம் இல்லை” என்று கூறினார். 

முன்னதாக, நாடாளுமன்றத்தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் கடலூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட இருந்த சி.கே. குமரவேல் கட்சியிலிருந்து விலகுவதாக இன்று அறிவித்திருந்தார். இவர் அக்கட்சியின் கடலூர் மற்றும் நாகை பொறுப்பாளராக இருந்து வந்தார். இதனையடுத்து, குமரவேலின் ராஜினாமா அறிவிப்பை ஏற்பதாக மக்கள் நீதி மய்யம் சார்பிலும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com