“இன்று தந்தை.. நாளை மகன்” துரத்தும் குடும்ப வாரிசு அரசியல்

“இன்று தந்தை.. நாளை மகன்” துரத்தும் குடும்ப வாரிசு அரசியல்
“இன்று தந்தை.. நாளை மகன்” துரத்தும் குடும்ப வாரிசு அரசியல்

இந்திய அரசியல் வரலாற்றில் குடும்ப வாரிசு அரசியல் என்பது பிரிக்க முடியாத ஒன்றாக இருந்து வருகிறது. இதில், அரசியல் வாரிசு என்பதில் இருந்து இதனை பிரித்து பார்க்க வேண்டும். அரசியல் வாரிசு என்று சம்பந்தப்பட்ட கட்சியின் கொள்கைகள், திறமைகள், பெற்று தந்த வெற்றிகள், அனுபவங்கள் உள்ளிட்டவற்றை அடிப்படையாக கொண்டவை. திமுகவை பொறுத்தவரை முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் அரசியல் வாரிசாக கருணாநிதி உருவானார். ஒரு அரசியல் வாரிசாக குடும்ப உறுப்பினர் கூட இருக்கலாம், ஆனால் அது கட்டாயம் அல்ல. தகுதியும், அனுபவம் தான் நிபந்தனை.

குடும்ப அரசியல் வாரிசு என்பது, ஒரு தந்தைக்கு பின்னர் அவரது மகன் அல்லது மகளுக்கு வாய்ப்பளிக்கப்படுவது. சில நேரங்களில் உறவினர்களாக இருப்பார்கள். குடும்ப வாரிசு அரசியல் என்பது எப்பொழுது விமர்சனத்திற்கு ஆட்படுகிறது என்றால், ஒரு கட்சியில் மூத்த தலைவர்கள், அனுபவம் வாய்ந்த தலைவர்கள் இருக்கும் போது குறைவான அனுபவமுள்ள குடும்ப வாரிசுக்கு முக்கியத்துவம் அளித்து பொறுப்புகளை வழங்கும் போதுதான். அப்படி குடும்ப வாரிசு அரசியலை செயல்படுத்தி விமர்சனத்திற்கு உள்ளான கட்சிகள் பல உள்ளன. 

நாட்டின் பிரதான தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சியில் தொடர்ச்சியாக வாரிசு அரசியல் நிலவி வருகிறது. நேரு, இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி, ராகுல் காந்தி என வரிசு அரசியல் தொடர்கிறது. நேருக்கு முன்னாள் அவரது தந்தை மோதிலால் நேருவும் இந்திய தேசிய காங்கிரஸில் தலைவராக இருந்தவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. அதேபோல், நாடு முழுவதும் உள்ள தேசிய, மாநில கட்சிகளிலும் வாரிசு அரசியல் கோலோச்சி வருகிறது. 

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தேசிய மாநாட்டு கட்சியில் ஷேக் அப்துல்லா, அவரது மகன் பரூக் அப்துல்லா, பேரன் உமர் அப்துல்லா என வாரிசு அரசியல் தொடர்கிறது. கர்நாடகாவில் முன்னாள் பிரதமரும் மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் தேவ கௌடாவின் மகன் குமாரசாமி தற்போது முதல்வராக உள்ளார். பஞ்சாபில் பிரகாஷ் சிங் பாதல், அவரது மகன் சுக்பீர் சிங் பாதல், ஒடிசாவில் பிஜு பட்நாயக், அவரது மகன் நவீன் பட்நாயக், தமிழகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி, அவரது மகன் திமுக தலைவர் ஸ்டாலின் என இந்தப் பட்டியல் தொடர்கிறது. 

இந்நிலையில்தான், தெலுங்கானாவில் புதிதாக வாரிசு அரசியல் தொடங்கியுள்ளது. காங்கிரஸ் கட்சியில் தனது அரசியல் பயணத்தை தொடங்கிய முதலமைச்சர் சந்திர சேகர் ராவ் 2001 இல் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியை தொடங்கினார். தெலுங்கானா மாநிலம் பிரிந்த பின்னர், 2014 சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தார். தற்போது, நடந்து முடிந்த தேர்தலிலும் 88 தொகுதிகளை வென்று மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளார். 

இந்நிலையில், தெலுங்கானாவில் மீண்டும் ஆட்சியை பிடித்துள்ள தெலுங்கானா ரஷ்டிரிய சமிதி கட்சியின் செயல் தலைவராக முதலமைச்சர் சந்திர சேகர் ராவின் மகன் கே.டி.ராமா ராவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சட்டமன்ற தேர்தல் பரப்புரையின் போது எதிர்க்கட்சிகள், ஆளும் டிஆர்எஸ் மீது வைத்த முக்கியமான விமர்சனமே குடும்ப அரசியல் தான். அதனை வெளிப்படையாக உறுதி செய்யும் வகையில், தேர்தல் முடிவுகள் வெளியான உடனே கே.டி.ராமா ராவ் செயல் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

சந்திர சேகர் ராவ் குடும்ப ஆட்சி நடத்தி வருவதாகவும், குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே அவரது ஆட்சியில் பலன் அடைந்து வருவதாக காங்கிரஸ், பாஜக கடுமையாக குற்றம்சாட்டி வருகிறது. சந்திர சேகர் ராவ் குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கட்சியில் முக்கிய பங்களித்து வருகின்றனர். மகன் கே.டி.ராமா ராவ், மகள் கவிதா, மருமகன் ஹரிஷ் ராவ். 

இதில், படிப்பை முடித்து தனியார் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்த கே.டி.ராமா ராவ், 2006 இல் வேலையை விட்டு தனது தந்தைக்காக தேர்தலில் பிரச்சாரம் செய்தார். அரசியல் நுழைந்த மூன்றாவது வருடத்திலேயே(2009) ஆந்திராவின் சிர்சில்லா தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனார். தெலுங்கானா தனி மாநில கோரிக்கைக்காக பதவியை ராஜினிமா செய்து, பின்னர் அதே தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தெலுங்கானா தனி மாநிலமாக பிரிக்கப்பட்ட பின்னர் 2014 இல் நடைபெற்ற சட்டப்பேர்வை தேர்தலில் போட்டியிட்டு கே.டி.ராமா ராவ் எம்.எல்.ஏ ஆனார். அவருக்கு தகவல் தொழில் நுட்பம் மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையை சந்திர சேகர் ராவ் வழங்கினார். தற்போது நடந்த தேர்தலிலும் சிரிசில்லா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். 

அடுத்து, மகள் கவிதா. ஐடி துறையில் டிகிரி படித்த அவர் அமெரிக்காவில் பணியாற்றினார். பின்னர், 2004 ஆம் ஆண்டில் இந்தியா வந்தார். தொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட அவர், தனது இரண்டு குழந்தைகளை கவனித்து வந்தார். பின்னர் தனது தந்தை சந்திர சேகர் ராவ் தொடங்கிய தனித் தெலுங்கானா போராட்டத்தால் கவரப்பட்டு, அதில் தன்னை இணைத்துக் கொண்டார். தெலுங்கான மாநில பகுதிகள் முழுவதும் பயணம் மேற்கொண்ட அவர் தெலுங்கானா ஜாகுரிதி என்ற அமைப்பை தொடங்கினார். ஜாகுரிதி என்றால் எழுச்சி என்று அர்த்தம்.

தெலுங்கானா பகுதிக்கான தனிக் கலாச்சாரத்தின் அடிப்படையில் பெண்களையும், இளைஞர்களையும் அந்த அமைப்பின் மூலம் திரட்டினார். பதுகம்மா பண்டிகையை தங்களுடைய கலாச்சார அடையாளமாக எடுத்துக் கொண்டு பணியாற்றினார். தொழிலாளர் அமைப்புகளிலும் இணைந்து கவிதா பணியாற்றினார். பின்னர், 2014 ஆம் ஆண்டு தனித் தெலுங்கானா உருவான போது நடைபெற்ற மக்களவை தேர்தலில் அவர் நிஜாமாபாத் தொகுதியில் போட்டியிட்டு 1,70,000 வாக்குகள் வித்தியாசத்தி வெற்றி பெற்றார். 

அடுத்து, சந்திர சேகர் ராவின் மருமகன் ஹரிஷ் ராவ். 2001 இல் தெலுங்கான ராஷ்டிரிய சமிதி கட்சி உருவாக்கப்பட்டது முதல் அதில் ஹரிஷ் ராவ் இருந்து வருகிறார். டிஆர்எஸ் கட்சியில் இளம் தலைவராக தனது அரசியல் வாழ்க்கையை அவர் தொடங்கினார். தன்னுடைய சொந்த தொகுதியான சித்திபெட்டில் இருந்து தொடர்ந்து 6 முறை எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதில் மூன்று முறை இடைத்தேர்தல் மூலம் வெற்றி பெற்றார். கடந்த டிஆர் எஸ் ஆட்சியில் வேளாண் துறை அமைச்சராக இருந்தார். தற்போது மீண்டும் சித்திபெட் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆகியுள்ளார். 

இந்நிலையில், தான் ஹரிஷ் ராவுக்கும், கே.டி.ராமா ராவுக்கும் இடையே அரசியல் வாரிசு போட்டி ஏற்பட்டுள்ளது. சந்திர சேகர் ராவ் தலைமையில், ஹரிஷ் ராவிற்கு எவ்வித சிக்கலும் இல்லை என்றே கூறலாம். சந்திர சேகர் ராவிற்கு அடுத்து டிஆர்ஆஸ் கட்சியில் யார் தலைவர் என்ற கேள்வி எப்பொழுது எழுந்ததோ அப்போது முதல் ஒரு சலசலப்பு நிலவி வந்தது. கே.டி.ராமா ராவ் டிஆர்எஸ் செயல் தலைவராக ஆகியுள்ள நிலையில், அது ஹரிஷ் ராவிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த சர்ச்சை குறித்து ஹரிஷ் ராவ் இதுவரை எந்த எதிர்மறையான கருத்தினையும் தெரிவிக்கவில்லை. தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் தன்னுடைய மாமன் மகன் தலைமையின் கீழ் பணியாற்றுவதில் எவ்வித பிரச்னையும் இல்லை என்று கூறினார். ஆனால், அரசியல் வழக்கமாக சொல்லப்படும் வசனம் தான் இது. 2014 ஆண்டு ஆட்சியை பிடித்தது முதலமைச்சர் ஆனது முதல் சந்திர சேகர் ராவ் தன்னுடைய மகனுக்கு முக்கியதுவம் அளித்து வருகிறார். தேர்தல் பொறுப்புகளையும் அவர் அளித்து வருகிறார். 

எல்லா வகையில் கே.டி.ராமா ராவை விட அதிக அனுபவம், வெற்றிகளை பெற்றவர் ஹிரிஷ் ராவ். தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் அடுத்த தலைமை மகன் என்ற அடிப்படையில் கே.டி.ராமா ராவ் முன்னிருத்தப்பட்டுள்ளர். இருப்பினும், டிஆர்எஸ் கட்சியின் சமீபகால வெற்றிகளுக்கு கே.டி.ராமா ராவ் முக்கிய பங்காற்றியுள்ளார் என்றே கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக அவர்கள் கட்சியில் இரண்டாம் இடத்தில் உள்ளார் என்று பேசப்பட்டு வந்தது. இந்நிலையில், கட்சி தலைமை அலுவலகத்தில் செயல் தலைவராக இன்று கே.டி.ராமா ராவ் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். சந்திர சேகர் ராவ் தேசிய அரசியலில் கவனம் செலுத்த உள்ளதால் தனக்கு அடுத்ததாக உள்ள கே.டி.ராமா ராவுக்கு மாநில பொறுப்புகளை கொடுத்துள்ளதாக தெரிகிறது. 

எப்படி இருந்தாலும், நிச்சயம் கே.டி.ராமா ராவுக்கும், ஹரிஷ் ராவுக்கும் இடையே அரசியல் போட்டிகள் ஏற்படுவதற்கான எல்லா சாத்தியக் கூறுகளும் அக்கட்சியில் உள்ளது. அதற்கான சந்தர்ப்பம் வரும் போது அவர் நிச்சயம் வெளிப்படுத்துவார் என்றே தெரிகிறது.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com