சூப்பர் ஓவரில் ஏன் இஷான் கிஷனை களமிறக்கவில்லை? ரோகித் சர்மா விளக்கம் !
பெங்களூர் அணிக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில் சூப்பர் ஓவரில் இஷான் கிஷனை ஏன் களமிறக்கவில்லை என்ற காரணத்தை மும்பை இண்டியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா விளக்கமளித்துள்ளார்.
நேற்றைய ஐபிஎல் போட்டியில் பெங்களூர் நிர்ணயித்த 202 ரன்கள் என்ற இமாலய வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணி, ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ் மற்றும் குவிண்டன் டி காக் விக்கெட்டுகளை மளமளவென இழந்தது. பின்னர் வந்த அதிரடி மன்னன் ஹார்திக் பாண்ட்யாவும் 15 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
இதனையடுத்து ஜோடி சேர்ந்த இஷான் கிஷன், பொல்லார்டு, பெங்களூரு அணி பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்தனர். நிலைத்து நின்று அதிரடி காட்டிய கிஷன், கடைசி ஓவரில் 99 ரன்களில் ஆட்டமிழந்தார். அரைசதம் கடந்திருந்த பொல்லார்டு, வெற்றிக்கு கடைசி பந்தில் 5 ரன்கள் தேவை என்ற நிலையில் பவுண்டரி விளாசினார். இதையடுத்து போட்டி சூப்பர் ஓவருக்குச் சென்றது. அதில் முதலில் பேட் செய்த மும்பை அணி, சைனியின் துல்லியமான பந்துவீச்சில் 7 ரன்களை மட்டுமே எடுத்தது. 8 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய பெங்களூரு அணி ஆட்டத்தில் கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது.
இது குறித்து பேசியுள்ள ரோகித் சர்மா "சூப்பர் ஓவரின்போது இஷான் கிஷனை களமிறக்கலாம் என நினைத்தோம். ஆனால் அவர் மிகவும் சோர்வாக இருந்தார். புத்துணர்ச்சியுடன் இல்லை. அதனால்தான் பொல்லார்டையும், ஹர்திக் பாண்ட்யாவையும் களமிறக்கினோம். 200 ரன்களை எங்களால் சேஸ் செய்ய முடியும் என நினைத்தே விளையாடினோம். வழக்கம்போல பொல்லார்டும், இஷான் கிஷனும் மிகச் சிறப்பாக விளையாடினார்கள். தொடக்கத்தில் இருந்தே எங்கள் ஆட்டம் சரியாக அமையவில்லை. அதேபோல சூப்பர் ஓவரில் நாங்கள் நினைத்தது நடக்கவில்லை" என தெரிவித்துள்ளார்.