கொடநாடு கொலை குறித்து குற்றம்சாட்டும் மேத்யூவ் சாமுவேல் யார்?
கொடநாடு கொலையின் பின்னணியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிதான் உள்ளார் எனவும் ஜெயலலிதா போன்று சர்வாதிகார ஆட்சி நடத்த பழனிசாமி திட்டமிட்டதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தவர் மேத்யூவ் சாமுவேல். யார் இவர்? இவரது பின்புலம் என்ன?
கேரளாவில் பத்தனபுரம் பகுதியில் பிறந்தவர் மேத்யூவ் சாமுவேல். இவர் கல்லூரி காலகட்டத்திலேயே அரசியல் நாட்டம் அதிகமாக கொண்டவர். டெல்லியில் ‘மங்களம்’ செய்திதாள் மற்றும் ‘மிட் டே’ ஆகியவற்றில் குறுகிய காலம் பணியாற்றிய மேத்யூவ் பின்னர் தெஹல்கா தொடங்கப்பட்ட போது செய்தியாளராக பணியாற்றியுள்ளார். தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு தெஹல்காவின் நிர்வாக இயக்குநராக பணி உயர்வு பெற்றார்.
மேலும் டெல்லியில்‘இந்தியா டுடே’,‘நியூஸ் எக்ஸ்’,‘லைவ் இந்தியா’,‘இந்தியா டிவி’ உள்ளிட்ட பல நிறுவனங்களில் மேத்யூவ் சாமுவேல் பணியாற்றியுள்ளார். 2016 ஆம் ஆண்டு தெஹல்காவில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு நாரதா நியூஸ் என்ற நிறுவனத்தை சொந்தமாக தொடங்கினார்.
மேத்யூவ் சாமுவேல் அன்னி மேத்யூவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு லெஸ்லி சாம் மேத்யூவ் என்ற மகனும் சாரா சூசன் மேத்யூவ் என்ற மகளும் உள்ளனர்.
‘ஆபரேஷன் வெஸ்ட் எண்டு’ என்ற புலனாய்வு செய்தி மூலம் ஜார்ஜ் பெர்னாண்டஸ் பதவி விலக இவரே காரணமாக இருந்தார். பாஜக தலைவர் பங்காரு லட்சுமணன் லஞ்சம் பெறும் வீடியோவை வெளியிட்டவரும் மேற்கு வங்கத்தில் சாரதா சிப்பெண்ட் மோசடியை அம்பலப்படுத்தியவரும் இவர்தான். ‘ஸ்டிங் ஆபரேஷன்’ மூலம் தேசிய ஜனநாயக கூட்டணியின் நான்கு மூத்த அமைச்சர்கள் பதவி விலக காரணமாக இருந்தவர்.