கட்சி பற்றி எப்போது அறிவிப்பார் ரஜினி?

கட்சி பற்றி எப்போது அறிவிப்பார் ரஜினி?

கட்சி பற்றி எப்போது அறிவிப்பார் ரஜினி?
Published on

ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பதற்குப் பின்னணியில் பாரதிய ஜனதா இல்லை என்று அவரது சகோதரர் சத்யநாராயண ராவ் தெரிவித்துள்ளார்.

கார்த்தி சுப்பாராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் ‘பேட்ட’. இந்தப்படத்தில் சிம்ரன், த்ரிஷா, விஜய் சேதுபதி, சசிகுமார், பாபி சிம்ஹா உட்பட பலர் நடித்து வருகின்றனர். அனிருத் இசை அமைத்திருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. இதையடுத்து ‘பேட்ட’ படத்தின் படப்பிடிப்பு, நிர்ணயிக்கப்பட்ட நாளில் இருந்து 15 நாட்கள் முன்னதாகவே முடிந்துவிட்டது என்று விஜயதசமி அன்று ரஜினிகாந்த் தனது ட்விட்டரில் பதிவு செய்திருந்தார்.

இதனைதொடர்ந்து இந்தப் படத்தின் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு வாரணாசியில் இருந்து அவர் நேற்று சென்னை திரும்பினார். அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘கட்சி தொடங்குவதற்கான பணிகள் 90 சதவிகிதம் முடிவடைந்துவிட்டன. ஆனால் டிசம்பர் 12 ஆம் தேதி கட்சி பற்றிய அறிவிப்பு வெளிவராது’ என்றார். இந்நிலையில், புதிய கட்சி தொடக்கம் குறித்து டிசம்பர் மாதம் நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பார் என அவரது சகோதரர் சத்யநாராயண ராவ் தெரிவித்துள்ளார். 

சத்தியநாராயணன் நாமக்கல்லில் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது, ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பதற்குப் பின்னணியில் பாரதிய ஜனதா இல்லை என்று அவர் தெரிவித்தார். மேலும் ரஜினியின் புதிய கட்சி தொடக்கம் குறித்து டிசம்பர் மாதம் அவர் (ரஜினி) அறிவிப்பார் என சத்யநாராயண ராவ் கூறியுள்ளார். அப்படி டிசம்பர் மாதம் அறிவிக்கவில்லை என்றால், எப்போது என்ற தேதியை ரஜினி கூறுவார் என அவர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி பலத்த எதிர்பார்ப்புக்கிடையே அரசியலில் ஈடுபடப்போவதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்தார். ஆனால் இன்று வரை தனது அரசியல் பயணத்தை தொடங்காமலே உள்ளார் ரஜினி. மேலும் புதிய கட்சி தொடக்கம் தொடர்பான அறிவிப்பு எப்போது வரும் என அவரது ரசிகர்களும் மிக நீண்ட காலமாக காத்து கொண்டு இருக்கின்றனர்.

கமல் அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடும் பட்சத்தில் அது ரஜினிக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என கமல் கட்சி தொடங்குவதற்கு முன் பலர் தெரிவித்திருந்தனர். ஆனால் கமல் கட்சி தொடங்கி ஆறு மாதத்திற்கு மேல் ஆகியுள்ள நிலையில் ரஜினி தனது கட்சி அறிவிப்பை எப்போது தொடங்குவார் என்பது குறித்து கேள்வி மட்டுமே எழுந்துள்ளது. “உண்மையான, நேர்மையான, நாணயமான, சாதி, மத சார்பற்ற அறவழி அரசியலே ஆன்மீக அரசியல்”லை ரஜினி எப்போது தொடங்குவார்? என்பதை அவரது ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com