மக்கள் நீதி மய்யம் கட்சியின் இடம் எது? - கமல் கணக்கும், சில எதிர்பார்ப்புகளும்...!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் இடம் எது? - கமல் கணக்கும், சில எதிர்பார்ப்புகளும்...!
மக்கள் நீதி மய்யம் கட்சியின் இடம் எது? - கமல் கணக்கும், சில எதிர்பார்ப்புகளும்...!

தமிழகத்தில் தற்போது சினிமா நட்சத்திரங்கள் சூழ் கலர்ஃபுல்லான பிரச்சாரம் என்றால் அது கமல் கட்சியின் பிரச்சாரம்தான். மக்கள் நீதி மய்யத்துக்கு இந்த தேர்தலில் என்ன இடம்? கமலின் கணக்குகள் என்ன?

 சினிமாவோடு கலந்ததுதான் தமிழகத்தின் அரசியல் வரலாறும். அண்ணா காலம் தொட்டு கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா என்று அரியணை ஏறிய சில திரைத்துறையினரையும், பெரும் வரவேற்புடன் வந்து புஸ்வாணமாகிப்போன பல சினிமா கலைஞர்களையும் பார்த்திருக்கிறது தமிழக அரசியல். அத்தகைய அரசியல் - சினிமா காம்போவிலிருந்து புதுவரவுதான் கமல்ஹாசன். தனது தனித்துவமான நடிப்பு மூலமாக சினிமாவில் உச்சம் தொட்ட கமல், அதே எண்ணத்துடன் 2018-இல் தொடங்கிய கட்சிதான் மக்கள் நீதி மய்யம். 2019-இல் கணிசமான வாக்குகளை வாங்கிய கமல், 2021 தேர்தலிலும் தனியாக அணி அமைத்து களம் காண்கிறார். இவர் இந்த தேர்தலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும்…!

மக்கள் நீதி மய்யம் கடந்து வந்த பாதை:

2018-ஆம் ஆண்டு பிப்ரவரி 21-இல் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினார் கமல். ஆரம்பம் முதலே அதிமுக - திமுகவுக்கு மாற்று என்பது போன்ற மய்யமான கோஷத்துடன் அரசியலை நகர்த்திய மக்கள் நீதி மய்யம், 2019-இல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் முதன்முதலாக தனித்து களம் கண்டது. கட்சி தொடங்கி 14 மாதங்களில் தேர்தலை சந்தித்த ம.நீ.ம, 15,75,620 வாக்குகளுடன், 3.72 சதவீத வாக்குகளை பெற்றது. இந்தத் தேர்தலில் 4 தொகுதிகளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்று ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்கள் இவர்கள். போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே கணிசமான வாக்குகளை பெற்ற மக்கள் நீதி மய்யம், கவனிக்கத்தக்க கட்சியாகவும் மாறியது. இந்தத் தேர்தலில் கமலுக்கு சென்னை, கோவை போன்ற நகர்ப்புறப்பகுதிகளில் மட்டும் அதிகளவில் வாக்குகள் பதிவானதை கவனிக்க வேண்டும். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் குறிப்பிடத்தக்க வாக்குகளை பெற்றாலும், அதே ஆண்டில் நடந்த உள்ளாட்சி தேர்தலை போட்டியிடாமல் புறக்கணித்தார் கமல்.

2021 தேர்தலுக்கான வியூகம் என்ன?

234 தொகுதிகளிலும் தனித்துதான் போட்டியிடுவோம் என்று அறிவித்த கமல், முதல் ஆளாக தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். தமிழகம் முழுவதும் முதற்கட்ட சுற்றுப்பயணத்தை மேற்கொண்ட கமலுக்கு, நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது மய்யத்தாரை உற்சாகம் கொள்ள செய்துள்ளது. குறிப்பாக இந்தத் தேர்தல் பிரச்சாரத்தில் கமல் "நான் எம்ஜிஆரின் மடியில் வளர்ந்தவன்" என்ற ரீதியாக தொடங்கி, அதிகளவில் எம்ஜிஆர் புகழ் பாட ஆரம்பித்தார். இதனைத் தொடர்ந்து அதிமுக தலைவர்களுக்கும், கமலுக்கும் இடையே காரசார வாக்குவாதம் நடந்தது.

பல்வேறு தரப்பினரையும் கவரும் வகையிலான பிரசார வியூகத்தை வடிவமைத்துள்ள கமல், திமுக, அதிமுகவுக்கு செல்லும் வாக்குகளையும், முதல் தலைமுறை வாக்குகளையும் கவர திட்டம் வகுத்துள்ளார். குறிப்பாக நடுநிலையாளர்கள், நகர்ப்புறவாசிகள், மேல்தட்டு மக்கள் மத்தியில் கமலுக்கு நல்ல வரவேற்பு உள்ளதையும் பார்க்க முடிகிறது. முதலில் தனித்து களம் காண்பதாக சொன்ன கமலின் கூட்டணியில் தற்போது சரத்குமாரின் சமக மற்றும் பாரிவேந்தரின் ஐஜேகே போன்ற கட்சிகளும் இடம்பெற்றிருக்கிறது. கமல் அமைக்கும் புதுக்கூட்டணி அதிமுகவுக்க்கோ, திமுகவுக்கோ பாதகமாக முடியும் என்று சொல்கின்றனர் அரசியல் நோக்கர்கள், கமலின் கணக்கு என்ன என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

- வீரமணி சுந்தரசோழன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com