பொதுச் சின்னத்தில் போட்டியிடுவதால் சிறு கட்சிகளுக்கு சாதக, பாதகம் என்ன? - ஓர் அலசல்

பொதுச் சின்னத்தில் போட்டியிடுவதால் சிறு கட்சிகளுக்கு சாதக, பாதகம் என்ன? - ஓர் அலசல்
பொதுச் சின்னத்தில் போட்டியிடுவதால் சிறு கட்சிகளுக்கு சாதக, பாதகம் என்ன? - ஓர் அலசல்

பெரிய கட்சிகளுடன் கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்கும் சிறு கட்சிகளுக்கு சின்னம் என்பது எப்போதும் சிக்கலாகவே இருந்து வருகிறது. பொதுச் சின்னத்தில் போட்டியிடுவதால் சிறு கட்சிகளுக்கு ஏற்படும் சாதக பாதகங்கள் என்னென்ன?

ஒரு கட்சியை மக்கள் மனதில் பசுமரத்தாணிபோல் பதிய வைப்பவை சின்னங்கள். வாக்காளர்கள் பலருக்கு கட்சியின் பெயர் தெரிகிறதோ இல்லையோ சின்னத்தை மனதில் நிறுத்திதான் வாக்களிக்கின்றனர். அதிமுக, திமுக போன்ற பெரிய கட்சிகளுக்கு பெரிய பலமே அவற்றின் சின்னம் தான். 1967ஆம் ஆண்டு தேர்தலில் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் கட்சியினை தொடங்கிய சி.பா.ஆதித்தனாரே, பின்னர் திமுகவுடன் கூட்டணியமைத்து உதய சூரியன் சின்னத்தில் தான் போட்டியிட்டார். தமிழரசு கழகத்தின் ம.பொ.சி கூட உதய சூரியனில் தான் களம் கண்டார். 1989ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வட சென்னை தொகுதில் போட்டியிட்ட ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் தா.பாண்டியன் காங்கிரஸ் கட்சியின் கை சின்னத்தில் போட்டியிட்டு வென்றார்.

பெரிய கட்சிகளின் சின்னங்கள் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கின்றன என்பதே இதற்கு சான்று. சிறிய கட்சிகளின் வேட்பாளர்கள் குறிப்பிட்ட சித்தாந்தங்களை கடந்து பலதரப்பட்ட மக்களிடம் சென்று சேர பெரிய கட்சிகளின் சின்னங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால் தேர்தல் வெற்றிக்கு பிறகு பெரிய கட்சிகளின் எல்லா கருத்துகளுக்கும் கொள்கை முடிவுகளுக்கும் உடன்பட்டாக நிர்பந்தம் சிறிய கட்சிகளுக்கு ஏற்படுகிறது. இதனால் நாளடைவில் சிறிய கட்சிகள் தங்கள் தனித்துவத்தை இழந்து மக்கள் மத்தியில் செல்வாக்கை இழக்க காரணமாக அமைந்து விடுகிறது. கட்சியின் வளர்ச்சி தடைபடுவதோடு தேர்தல் ஆணைய அங்கீகாரமும் கிடைக்காமல் போய்விடும்.

எனவே தேர்தல் களம் என வருகையில் சிறிய கட்சிகளுக்கு சின்னங்கள் பெரும் நெருக்கடியை ஏற்படுத்துகின்றன. தமிழகத்தில் 2016 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் களம் கண்ட முக்குலத்தோர் புலிப்படையின் கருணாஸ், மனிதநேய ஜனநாயக கட்சியின் தமிமுன் அன்சாரி, கொங்கு இளைஞர் பேரவையின் தனியரசு, இந்திய குடியரசுக் கட்சியின் சே.கு.தமிழரசன், சமத்துவ மக்கள் கட்சியின் சரத்குமார் உள்ளிட்டோர் இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிட்டனர்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்த ஐ.ஜே.கே, மதிமுக, விசிக வேட்பாளர்கள் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டன. எனவே இந்த முறையும் தங்கள் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என பெரிய கட்சிகள் நிர்பந்திப்பதாக கூறப்படுகிறது. ஆனால் விசிக , மதிமுக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் தனிச்சின்னத்தில் போட்டியிடுவதில் உறுதியாக உள்ளன. தேர்தல் ஆணைய அங்கீகாரம் , வெற்றி வாய்ப்பு உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டிய நெருக்கடி சிறிய கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com