\
ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா நடவடிக்கைகள் என்ன?: உயர்நீதிமன்றம் கேள்வி

ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா நடவடிக்கைகள் என்ன?: உயர்நீதிமன்றம் கேள்வி

ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா நடவடிக்கைகள் என்ன?: உயர்நீதிமன்றம் கேள்வி
Published on

ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் பணப்பட்டுவாடா புகாரில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக பதில் அளிக்குமாறு மத்திய அரசு , தேர்தல் ஆணையம், ஊழல் கண்காணிப்பு ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பணப்பட்டுவாடா புகாரால் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெறவிருந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. இந்தப் புகாரில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட பிறகே தேர்தலை நடத்த வேண்டும் என திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் மருதுகணேஷ் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில்‌ விசாரணைக்கு வந்தது. 

பணப்பட்டுவாடா தொடர்பாக வருமானவரித்துறை அறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தும், தேர்தல் ஆணையம் அளித்த புகாரில் சம்பந்தப்பட்டவர்களின் பெயர் தெரிவிக்கப்படவில்லை என்றும், எனவே ஆளும் கட்சிக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறதா என திமுக சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வில்சன் கேள்வி எழுப்பினார். ஊழல் குற்றச்சாட்டு புகாரில் தேர்தல் ஆணையத்திற்கான வழிமுறைகள் வகுக்கப்பட வேண்டும் என்றும் திமுக வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். அதற்கு மத்திய அரசு தங்களுக்கான விதிகளை வகுக்க முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்தது. 

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், மத்திய அரசு தலையிட முடியாவிட்டாலும், நீதிமன்றம் தலையிட்டு தேர்தல் ஆணையத்திற்கான நெறிமுறைகளை வகுக்க முடியும் என தெரிவித்தனர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா புகாரில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி மத்திய அரசு, தேர்தல் ஆணையம், ஊழல் கண்காணி‌ப்பு ஆணையம், காவல்துறை, தமிழக அரசு உரிய விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை டிசம்பர் 11ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com