“ஈபிஎஸ்-ஓபிஎஸ் அணிக்கு திரும்ப மாட்டோம்” - டிடிவி ஆதரவாளர்கள் பதிலடி

“ஈபிஎஸ்-ஓபிஎஸ் அணிக்கு திரும்ப மாட்டோம்” - டிடிவி ஆதரவாளர்கள் பதிலடி

“ஈபிஎஸ்-ஓபிஎஸ் அணிக்கு திரும்ப மாட்டோம்” - டிடிவி ஆதரவாளர்கள் பதிலடி
Published on

கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் இணைய வேண்டும் என்று ஈபிஎஸ்-ஓபிஎஸ் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்த நிலையில், அதனை ஏற்க டிடிவி ஆதரவாளர்கள் மறுத்துவிட்டனர்.

ஜெயலலிதா மறைவிற்கு பின் தமிழக அரசியலிலும், அதிமுகவிலும் ஏகப்பட்ட மாற்றங்கள் அரங்கேறின. தற்போது முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வமும் உள்ளனர். அதேசமயம் அதிமுகவிற்கு எதிராக டிடிவி தினகரன் அணி உள்ளது. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை டிடிவி தினகரன் தோற்றுவித்திருந்தாலும், விரைவில் அதிமுகவையும், அதன் இரட்டை இலை சின்னத்தையும் மீட்டே தீருவோம் என தொடர்ச்சியாக கூறிவருகிறார். ஆர்.நேகர். தொகுதி எம்எல்ஏவான டிடிவி தினகரனுக்கு ஆதரவாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதுதவிர ரத்தின சபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய 3 எம்எல்ஏக்கள் டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் சபாநாயகர் எடுத்த முடிவில் தவறில்லை என்று 3வது நீதிபதி சத்திய நாராயணன் தீர்ப்பு அளித்தார். இந்த தீர்ப்பை ஓபிஎஸ்-ஈபிஸ் தரப்பினர் கொண்டாடினர். இதனிடையே, தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவுள்ளதாகவும், இதற்கிடையில் இடைத்தேர்தல் வந்தாலும் சந்திக்க தயார் என்றும் டிடிவி தரப்பினர் தெரிவித்தனர். 

இந்நிலையில், தங்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வெளியான நிலையில், அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் கட்சியில் மீண்டும் இணைய வேண்டும் என்று ஓபிஎஸ்-ஈபிஎஸ் இன்று அழைப்பு விடுத்துள்ளனர். ஆனால், “அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் யாரும் மீண்டும் திரும்பி வர மாட்டார்கள். தற்போது அழைப்பதற்கான காரணத்தை விளக்க வேண்டும்” என்று டிடிவி தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் கூறி வருகின்றனர். 

அதிமுகவை மீட்டுத்தான் எடுப்போமே தவிர மீண்டும் இணையமாட்டோம் என்று டிடிவி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் கூறியுள்ளார். இதனிடையே, மதுரை தனியார் விடுதியில் டிடிவி தினகரனுடன் கருணாஸ் எம்எல்ஏ சந்தித்துள்ளார். டிடிவி-கருணாஸ் சந்திப்பின்போது தங்க தமிழ்ச்செல்வன், சாத்தூர் சுப்பிரமணியன் ஆகியோர் உடனிருந்தனர்.

இந்நிலையில், பொதுத் தேர்தலோ, இடைத்தேர்தலோ எது நடந்தாலும் டிடிவி அணி வெல்வது உறுதி என்று கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு கூறியுள்ளார். விழுப்புரத்தில் புதிய தலைமுறைக்கு எம்.எல்.ஏ பிரபு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார். மேலும், “கொறடா பரிந்துரைப்படி விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பமாட்டார்கள், அனுப்பினால் சட்டப்படி எதிர்கொள்வோம்” என்றார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com