மேகதாதுவில் கர்நாடக அரசு புதிய அணை கட்ட தமிழக அரசின் மூத்த வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் இசைவு தெரிவித்ததாக வந்த செய்திகள் உண்மைக்கு மாறானது என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’அந்த செய்தி முற்றிலும் தவறானது. காவிரி நடுவர் மன்றத்தில் 5.2.2007 நாளிட்ட இறுதி ஆணை மீது உச்சநீதிமன்றத்தில் தமிழகம், கர்நாடகம், கேரளா அரசுகளால் தக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுக்குகள் மீது 11.7.2017 முதல் இறுதி வாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கர்நாடக மற்றும் கேரள அரசுகளின் இறுதிவாதம், நிறைவடைந்த நிலையில் 2.8.2017 முதல் தமிழக அரசின் மூத்த வழக்கறிஞர் சேகர் நவடேவின் இறுதிவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 17.82017 அன்று விவாதம் நடைபெற்றபோது கர்நாடக அரசின் மூத்த வழக்கறிஞர் நரிமன் குறுக்கிட்டு காவிரி நதியில் தமிழகத்தின் பங்கான 192 டிஎம்சி தண்ணீரை விடுவித்த பின்னர் எஞ்சியுள்ள மிகை நீரை கர்நாடக அரசு பயன்படுத்திக் கொள்ள முடியும் என்றும், தமிழகத்திற்கு நீர்விடுவிக்க ஏதுவாக மிகை நீரை சேமிக்க கர்நாடக அரசு மேற்கொள்ளும் புதிய அணைகட்டும் பணிகளை தமிழக அரசு தொடர்ந்து எதிர்த்து வருவதாகவும் வாதிட்டார்.
தமிழக அரசு எதிர்ப்புத் தெரிவிப்பது தொடர்பாக தமிழக அரசு வழக்கறிஞரை உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேட்டபோது, தமிழகத்தின் சமதள நிலப்பரப்பின் காரணமாக புதிய அணை கட்டுவது இயலாது என்பதாலும், காவிரி நடுவர் நடுவர் மன்ற இறுதியாணையை சுட்டிக்காட்டி மிகையான நீரினை தற்போதுள்ள அணையிலேயே சேமித்து வைத்து அனைத்து சம்பந்தப்பட்ட மாநிலங்களும் உரிய பங்கினை பெற்றுக்கொள்ள குறிப்பிடப்பட்டுள்ளது என தமிழக அரசு வழக்கறிஞர் வாதிட்டார்.
இதனையடுத்து தமிழகத்தில் தக்க இடத்தில் ஒரு அணையைக் கட்டி நிர்வகிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடலாமா என்ற கருத்தினை முன்வைத்து உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா, மத்திய தலைமை வழக்கறிஞரிடம் இதற்கான நிலைப்பாட்டினை தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டார். தமிழக அரசின் வழக்கறிஞர் இது குறித்து தனியாக வாதிடப்பட்டும் என பதிலளித்தார். இந்நிலையில், கர்நாடகாவில் மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கு எந்த எதிர்ப்பும் இல்லை என தமிழக அரசின் மூத்த வழக்கறிஞர் கூறியதாக வந்த பத்திரிக்கை செய்தி உண்மைக்கு மாறானது.
புதிய அணைகள் கட்டுவது தொடர்பாக மத்திய அரசு அதன் நிலைப்பாட்டினை உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கும்போது தமிழகத்தின் உரிமைகள் எவ்விதத்திலும் பாதிக்காத வகையில் வலுவான வாதங்கள் முன் வைக்கப்படும். எனவே தமிழக அரசு விவசாயிகளின் நலனுக்கு எதிராக கர்நாடக அரசு அணை கட்ட புதிய அணை கட்ட தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது’என்று தெரிவித்தார்.