வருங்காலத்தில் எஞ்சியுள்ள தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் – முதல்வர் ஸ்டாலின்
சாமானியர்களுக்கான அனைத்து திட்டங்களையும் தீட்டி வருகிறோம், வருங்காலத்தில் எஞ்சியுள்ள வாக்குறுதிகளையும், புதிய திட்டங்களையும் செய்து காட்டுவோம் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் கிறிஸ்துமஸ் விழாவில் பேசியுள்ளார்.
கிறிஸ்துமஸ் பெருவிழாவை முன்னிட்டு சென்னை கொளத்தூர் தொகுதியில் 1500 ஏழை எளிய மக்களுக்கு புத்தாடைகள், கேக், சமையல் பொருட்கள் மற்றும் 1000 ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை முதலமைச்சர் வழங்கினார். இந்த விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், கொளத்தூர் தொகுதி என்றாலே தன் மனதிற்கு மிகவும் மகிழ்ச்சி தரக்கூடிய ஒரு இடமாக அமைந்துள்ளதாகவும், தொடர்ந்து பார்க்கக்கூடிய முகமாக இருந்தாலும் தொகுதி மக்கள் தான் கொளத்தூர் தொகுதிக்கு வரும்போதெல்லாம் சாலையின் இருபுறங்களிலும் நின்று தன்னை உற்சாகமாக வரவேற்பதில் மகிழ்ச்சியாக இருப்பதாக குறிப்பிட்டார். இதே போன்ற நிலை இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தான் காண்பதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், திமுக தேர்தல் வாக்குறுதியில் 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை கொடுத்ததாகவும், இந்த ஆறு மாத காலத்தில் அதில் 300 வாக்குறுதிகளை நிறைவேற்றி இருப்பதாகவும், 5 ஆண்டுகளில் செய்ய வேண்டியதை திமுக ஆட்சியில் ஐந்தே மாதத்தில் செய்து காட்டுவதாக முதலமைச்சர் பெருமையுடன் கூறினார். சாமானியர்களுக்கான அரசு என்பதால் சாமானியர்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் இந்த அரசு செய்து வருவதாகும், வரும் நாட்களில் ஏற்கெனவே சொல்லியுள்ள வாக்குறுதிகளையும் இந்த அரசு நிறைவேற்றும் என்றும், எனக்கு வந்திருக்கும் பொறுப்புகளை பதவியாக கருதாமல் பொறுப்பாக கருதி பொறுப்புடன் செயல்படுவேன் என்றும் முதல்வர் கூறினார்.