”வாக்காளர் பட்டியலில் எங்கள் பெயரை காணோம்”: ஆட்சியரிடம் புகார் மனு கொடுத்த பொதுமக்கள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்தவர்களுக்கு தற்போது நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்றும் வேண்டுமென்றே நீக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியரிடம் பெயர் நீக்கம் செய்யப்பட்டவர்கள் புகார் மனு அளித்தனர்.
புதுக்கோட்டை நகர் பகுதிக்கு உட்பட்ட திருக்கோகர்ணம் பகுதியில் வசிப்பவர்கள் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்தனர். இந்நிலையில் தற்போது நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் அவர்களது பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது. அதே முகவரியில் பல்லாண்டு காலமாக வசித்து வரும் தங்களது பெயரை அப்பகுதியைச் சேர்ந்த முன்னாள் நகரமன்ற உறுப்பினர் செல்வகுமார் தூண்டுதலின் பேரில் வாக்காளர் பட்டியலிலிருந்து எங்கள் அனுமதி இல்லாமல் நீக்கி உள்ளனர்.
இதுகுறித்து தேர்தல் அதிகாரிகளிடம் கேட்டால் முறையாக பதில் கூற மறுக்கின்றனர் என்றும் இதனால் வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட பல ஆவணங்கள் இருந்தும் நாங்கள் வாக்களிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்றும் கூறி இன்று வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் செய்யப்பட்டோர் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான உமா மகேஸ்வரியிடம் புகார் மனு கொடுத்தனர்.
மேலும், வாக்களிக்கும் உரிமை பறிக்கப்பட்டதால் ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு உள்ளிட்டவற்றையும் மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்க போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.