
காவிரி பிரச்னையில் பிரதமர் மோடியை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்று முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.
சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவரி காவிரி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் பற்றி கேள்விக்கு பதிலளித்தார். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர் பழனிசாமி, “காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை அரசிதழில் வெளியிட செய்தவர் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா. காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பில் 6 வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. காலக்கெடு முடிய இன்னும் சில நாட்கள் உள்ளது. நிச்சயம் மத்திய அரசு, காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. பிரதமரை சந்திப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. காவிரி பிரச்சனையில் அ.தி.மு.க. எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறார்கள். நாடாளுமன்றம் தொடங்கியதில் இருந்து இன்று வரை முடக்கப்பட்டு வருகிறது” என்றார்.
மேலும், “ஸ்டெர்லைட் விவகாரத்தை அரசு உரிய முறையில் பரிசீலிக்கும். ஸ்டெர்லைட் தொடர்பாக நீதிமன்றத்திலுள்ள பிரச்னைகள் குறித்தும் ஆராயப்படும். தமிழக அரசுக்கு நெருக்கடி கொடுக்கவே பல்வேறு போராட்டங்களை எதிர்க்கட்சிகள் நடத்துகின்றன” என்று அவர் குற்றஞ்சாட்டினார்.