அம்பேத்கரை இழிவுபடுத்திய மத்திய அமைச்சர்: ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்

அம்பேத்கரை இழிவுபடுத்திய மத்திய அமைச்சர்: ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்
அம்பேத்கரை இழிவுபடுத்திய மத்திய அமைச்சர்: ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்

அரசியலமைப்பு சட்டத்தை மாற்றுவோம் என்று கூறிய மத்திய அமைச்சர் ஆனந்த் குமார் ஹெக்டேவின் பேச்சுக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.

கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் பிராமணர் இளைஞர் சங்க நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ஆனந்த் குமார் ஹெக்டே பேசும்போது, “ஒரு முஸ்லிம் தன்னை முஸ்லிம் என்றோ, ஒரு கிருஸ்துவர் தன்னை கிருஸ்துவர் என்றோ, ஒரு பிராமணர் தன்னை பிராமணர் என்றோ, ஒரு லிங்காயத் தன்னை ஒரு லிங்காயத் என்றோ பெருமையாக கூறிக்கொள்வாரே ஆனால் எனக்கு மகிழ்ச்சி. ஏனென்றால் அவர்களில் ரத்தம் என்ன என்பது அவர்களுக்கு தெரியும். ஆனால் மதச்சார்பற்றவர்கள் என்று சொல்பவர்களை எப்படி அழைப்பது என்று சொல்ல தெரியவில்லை. என்ன ரத்தம் என்று தெரியாமல் தங்களை மதச்சார்பற்றவர்கள் என்று கூறிக்கொள்பவர்களுக்கு சொந்த அடையாளம் கிடையாது. அவர்களுக்கு தங்கள் பெற்றோர் யார் என்று தெரியாது. மக்கள் தங்களின் ஜாதி-மத அடையாளத்தைக் கண்டுகொள்ள வேண்டும். நீங்கள் யார் என்று சொன்னால் அதற்கு நான் தலைவணங்குகிறேன்” என்று பேசினார்.

மேலும் அவர் பேசுகையில், “அரசியலமைப்பு சட்டம் மதச்சார்பின்மையை கூறுகிறது என்றும் அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் சிலர் கூறுகின்றனர். அரசியலமைப்பு சட்டத்தை நாங்கள் மதிக்கிறோம். ஆனால், அரசிலமைப்பு சட்டம் பலமுறை மாற்றப்பட்டுள்ளது. எதிர்காலத்திலும் மாற்றப்படும். அரசியலமைப்பு சட்டத்தை மாற்றுவதற்கு நாங்கள் இருக்கிறோம். நாங்கள் மாற்றுவோம்” என்றார்.

மத்திய அமைச்சரின் மதச்சார்பின்மை மற்றும் அரசியலமைப்பு குறித்த இந்தப் பேச்சுக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. #HegdeInsultsAmbedkar என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டில் உள்ளது. பாஜக அமைச்சரின் பேச்சுக்கு கர்நாடக மாநில எஸ்.சி., எஸ்.டி ஆணைய தலைவர் முனியப்பா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் ஒருவர் இதுபோன்ற கருத்துக்களை கூறிவருவது மோசமானது என்றார். மேலும் ஹெக்டே மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி தனது இணையதள பக்கத்தில் , “அரசியலமைப்பு சட்டத்துக்கு அச்சுறுத்தல்” என்ற தலைப்பில் கண்டன செய்தி வெளியிட்டுள்ளது. இதில் இது பாஜக அமைச்சரின் பேச்சு மட்டும் அல்ல. ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தின் வெளிப்பாடு என்று கடுமையாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பானது தற்போது உள்ள அமைப்பு முறையை மாற்றி அமைத்து ஜாதி ரீதியிலான அமைப்பை கொண்டு வர விரும்புகிறது என்று அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கர்நாடக காங்கிரஸ் சார்பில் முதலமைச்சர் சித்தராமையா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “மதசார்பற்ற நாட்டை உருவாக்குவோம் என்று அரசியலமைப்பு சட்டத்தில் நாங்கள் தெளிவாக கூறியுள்ளோம். பல்வேறு மதங்களை, ஜாதிகளை சேர்ந்தவர்கள் நம் நாட்டில் வாழ்கிறார்கள். 125 கோடி மக்களும் இந்தியர்கள் தான். அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

பாஜக அமைச்சர் ஹெக்டேவின் பேச்சு, மணிசங்கர் ஐயரின் ‘நீச்’ விமர்சனத்தை விட 100 மடங்கு ஆபத்தானது என்று பலரும் கூறியுள்ளனர். மதச்சார்பின்மை குறித்த பிரதமர் மோடியின் கருத்தினை பலர் ட்விட்டரில் பதிவிட்டு விமர்சித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com