எம்.எல்.ஏ சீட் கொடுக்காததால் கதறி, கதறி அழுத பாஜக, காங். தலைவர்கள் - வீடியோ
கர்நாடக மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சீட் வழங்கப்படாத விரக்தியில் பாஜக, காங்கிரஸ் தலைவர்கள் சிலர் கதறி அழுத காட்சிகள் வெளியாகியுள்ளன.
கர்நாடகாவில் வருகின்ற மே 12ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. மே 15ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த நிலையில் கார்நாடகாவில் தேசிய அளவிலான பாஜக, காங்கிரஸ் தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். ஆளும் காங்கிரஸ் மற்றும் பாஜக தரப்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். சுமார் 90 சதவீதத்திற்கு மேல் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு விட்டனர்.
இந்நிலையில், வேட்பாளர் அறிவிப்பு தொடர்பாக அதிருப்தி அடைந்த பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் பயங்கர ரகையில் ஈடுபட்டு வருகின்றனர். பாஜகவில் முன்னாள் எம்.எல்.சி ஆன ஷசில் நமோஷி என்பவருக்கு சீட் கிடைக்கவில்லை. இதனால் விரக்தியடைந்த நமோஷி, செய்தியாளர்கள் சந்திப்பின் போது கதறி கதறி அழுதார். நமோஷி அருகில் இருந்த அவரது ஆதரவாளர்கள் அவரை தேற்றி அழைத்துச் சென்றனர். இந்த காட்சிகள் கர்நாடக ஊடகங்களில் வெளியானது. பின்னர் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.
அதேபோல், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தற்போதையை பயாட்கி தொகுதி எம்.எல்.ஏ பசவராஜ் சிவன்னாவும் தனக்கு சீட் வழங்கப்படாததை அறிந்து தேம்பி, தேம்பி அழுதார். அவரது தொகுதியில் எஸ்.ஆர் பாட்டில் என்பவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் ஹங்கல் தொகுதி எம்.எல்.ஏவும் மாநில கலால் துறை அமைச்சருமான மனோகர் தஹ்சில்தரும் கண்ணீர் மல்க தனது விரக்தியை வெளிப்படுத்தினர்.
காங்கிரஸ் கட்சியின் நிலைதான் இந்த விவகாரத்தில் மிகவும் மோசமாக உள்ளது. ஹங்கல், கிட்டூர், கோலார், பேலூர் உள்ளிட்ட பல தொகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்களுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினரே போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். சில இடங்களில் அதிருப்தியாளர்கள் கட்சி அலுவலகங்களுக்குள் புகுந்து பொருட்களை அடித்து உடைத்துள்ளனர்.