ஸ்டாலின் சுட்டு விரல் நீட்டினால் சிட்டாக பணியாற்றுவேன்- திமுகவில் இணைந்த வி.பி.கலைராஜன்
அமமுகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்ட வி.பி.கலைராஜன், திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளராக இருந்தவர் வி.பி.கலைராஜன். இவரை கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கி நேற்று மாலை டிடிவி தினகரன் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் நீக்கம் என அமமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அவர் வகித்து வந்த தென்சென்னை வடக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பில் வி.சுகுமார் என்பவரை டிடிவி தினகரன் நியமித்தார்.
இந்நிலையில் அமமுகவில் இருந்து நீக்கப்பட்ட வி.பி.கலைராஜன் இன்று திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். திருச்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்த வி.பி.கலைராஜன், முறைப்படி தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “டிடிவி தினகரனோடு எந்த கருத்து வேறுபாடும் இல்லை. திராவிட இயக்கத்தை பாதுகாக்கும் தகுதியுடைய ஒரே தலைவர் மு.க.ஸ்டாலின். மத்தியில் உள்ள மதவாத அரசை எதிர்த்து துணிச்சலாக பேசக்கூடிய ஒரே தலைவர் மு.க.ஸ்டாலின். அவரின் தலைமை சரியானது என்பதால் திமுகவில் என்னை இணைத்துக் கொண்டேன். ஸ்டாலின் சுட்டு விரல் நீட்டினால் சிட்டாக பறந்து பணியாற்றுவேன். அமமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் விரைவில் திமுகவில் இணைவார்கள்” என்றார்.