வருமான வரி சோதனையை பெரிதுபடுத்த வேண்டாம்: விவேக் ஜெயராமன் பேட்டி
கடந்த 5 நாட்களாக சசிகலா குடும்பத்தினரினரின் வீடு, அலுவலகங்களில் நடந்த வருமான வரி சோதனையை பெரிதுபடுத்த வேண்டாம் என்று ஜெயா டிவியின் தலைமை செயல் அதிகாரி விவேக் ஜெயராமன் தெரிவித்தார்.
சசிகலாவின் உறவினர்களுக்கு சொந்தமான இடங்களில் கடந்த 9-ஆம் தேதி முதல் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வந்தனர். 5 நாட்களாக நடைபெற்ற இந்த சோதனை நேற்றைய தினம் நிறைவு பெற்றது. மொத்தமாக 187 இடங்களில் நடைபெற்ற இந்த சோதனையில் 1800 அதிகாரிகள் பங்கேற்றிருந்தனர். இந்நிலையில் இதுகுறித்து இளவரசியின் மகனும், ஜெயா டிவியின் தலைமை செயல் அதிகாரியுமான விவேக் ஜெயராமன் இன்று செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது பேசிய அவர், “கடந்த 5 நாட்களாக ஜெயா டிவி, ஜாஸ் சினிமாஸ் மற்றும் எங்களுக்கு சொந்தமான நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். ஜெயா டிவி, ஜாஸ் சினிமாஸ் நிர்வாகத்தை கடந்த 2 ஆண்டுகளாக நான்தான் கவனித்து வருகிறேன். எனவே ஜெயா டிவி, ஜாஸ் சினிமா ஆகியவற்றின் வருவாய் குறித்து என்னிடம் கணக்கு கேட்டனர். மேலும் திருமணத்தின்போது என் மனைவிக்கு போடப்பட்ட நகைகள் குறித்தும் வருமான வரித்துறையினர் கணக்கு கேட்டனர். மனைவியின் நகைகளுக்கு உரிய ஆவணங்களை வைத்துள்ளேன். அதனையும் இரண்டு மூன்று நாட்களில் சமர்ப்பிப்பேன். வருமான வரித்துறையினர் அவர்கள் வேலையை செய்தார்கள். பதில் சொல்வதுதான் எங்களது கடமை. அதனை நாங்கள் செய்தோம். வருமான வரி சோதனையை பெரிதுபடுத்த வேண்டாம். அதிகாரிகள் மீண்டும் விசாரணைக்கு அழைத்தால் ஒத்துழைப்பு தருவேன்” என்றார்.