தமிழக அரசியல் களம் கதகதப்பாக இருந்துவரும் நிலையில் நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான நடிகர் விஷால் டிடிவி தினகரனை இன்று நேரில் சந்தித்தார்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் கடந்த சில தினங்களுக்கு முன் ஒன்றாக இணைந்தன. டிடிவி தினகரன் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் செய்தியாளர்களைச் சந்திப்பதை தவிர்த்து வருகிறார். அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் பாண்டிச்சேரியில் உள்ள விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து டிடிவி தினகரன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், விஷால் இன்று தினகரன் வீட்டிற்கு சென்று அவரைச் சந்தித்தார். தனது தங்கை கிருத்திகாவின் திருமணம் வருகிற 27 ஆம் தேதி நடைபெறவுள்ளதை அடுத்து திருமண பத்திரிகையை விஷால் தினகரனிடம் வழங்கினார். இந்த சந்திப்பு தனிப்பட்ட முறையிலானது என்பதால் அவர்கள் சந்தித்த புகைப்படங்கள் வெளியாகவில்லை. சமீபத்தில் வைகோவைச் சந்தித்து விஷால் திருமணப் பத்திரிக்கையை வழங்கினார்.