”அடியாட்களை வைத்து மிரட்டல்.. பெண்களிடம் தகாத வார்த்தை” நிதிநிறுவனங்கள் மீது புகார்
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் கொரோனாவால் ஏற்பட்ட வேலை இழப்பால் வாரக் கடனை கட்டுவதற்கு கூடுதல் அவகாசம் கேட்ட பெண்களை, நிதி நிறுவனத்தினர் அடியாட்கள் வைத்து மிரட்டுவதாக குற்றம் சாட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் 20 க்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டி, எம்.ஜி.ஆர் நகர் பகுதிகளில் உள்ள பெண்கள் சுய உதவிக்குழு நடத்தி வருகின்றனர். 15 பெண்கள் இணைந்து தனி தனிக் குழுக்களாக கூடி, தனியார் மைக்ரோ நிதி நிறுவனங்களிடம் வாரம் மற்றும் மாதக் கடன் பெற்று கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக சிறுதொழில் செய்து வருகின்றனர்.
கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக தவணையை சரியாக கட்டிவந்த நிலையில், தற்போது கொரோனா பாதிப்பால் வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே மீதம் உள்ள தவணையை கட்ட நிதி நிறுவனங்களிடம் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த பெண்கள் காலஅவகாசம் கேட்டதாக தெரிகிறது.
இதனை ஏற்றுக் கொள்ளாத நுண் நிதிநிறுவனத்தினர் அடியாட்களை கும்பலாக அனுப்பி தங்களை மிரட்டுவதாக பெண்கள் குற்றம் சாட்டினர். மேலும் வீட்டின் உள்ளே வந்து தனியாக இருக்கும் பெண்களிடம் தகராறில் ஈடுபடுவதுடன், தரக்குறைவாக பேசுவதாகவும் தெரிவித்தனர்.
இது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி வட்டாட்சியரிடம் மனு அளித்தும், அதிகாரிகள் தரப்பில் இருந்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டி மலையடிப்பட்டி மற்றும் எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த 20 க்கும் மேற்பட்ட பெண்கள் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நிதிநிறுவனங்களின் அத்துமீறலை கண்டிக்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும், வட்டாட்சியர் உள்ளிட்ட வருவாய் துறை அதிகாரிகளை கண்டித்தும் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த பெண்கள் முழக்கங்களை எழுப்பினர். பெண்களின் இந்த திடீர் போராட்டத்தால், வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.