காங்கிரஸ் தோல்வி: முதல்வர் வீரபத்ரசிங், மகன் விக்ரமாதித்யா வெற்றி
இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முதலமைச்சர் வீரபத்ர சிங் மற்றும் அவரது மகன் விக்ரமாதித்யா வெற்றி பெற்றுள்ளனர்.
இமாச்சலப் பிரதேசத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே பாஜக முன்னிலை பெற்று வந்தது. மொத்தமுள்ள 68 தொகுதிகளில் சுமார் 40 இடங்களில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. தற்போதையை நிலவரப்படி 16 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள பாஜக 30 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதனால் இமாச்சலில் பாஜக ஆட்சி அமைப்பது உறுதி ஆகிவிட்டது.
இதனிடையே, காங்கிரஸ் கட்சி தோல்வி அடையும் தருவாயில் உள்ள நிலையில், ஹிமாச்சல் முதலமைச்சர் வீரபத்ர சிங் ஆர்கி தொகுதியில் 34,499 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவரது மகன் விக்ரமாதித்யா சிம்லா புறநகர் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.
தேர்தல் முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வீரபத்ர சிங், “பாஜகவின் வெற்றியை ஏற்றுக் கொள்கிறேன். ஒரு முதலமைச்சராக தோல்விக்கு முழு பொறுப்பேற்கிறேன். இன்றுபோல் வருங்காலங்களிலும் விக்ரமாதித்யா வெற்றி பெறுவார் என்று நம்புகிறேன்” என்றார்.
பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் தருவாயில் உள்ள நிலையிலும், அக்கட்சி சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிரேம்குமார் துமல் தோல்வி அடைந்தார்.