விழுப்புரம்: மேலும் ஒரு ஊராட்சித் தலைவர் பதவி ரூ.14 லட்சத்துக்கு ஏலம்
விழுப்புரம் அருகே மேலும் ஒரு ஊராட்சித்தலைவர் பதவி 14 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகாவுக்கு உட்பட்ட பொன்னங்குப்பம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவி, ஆதிதிராவிடர் பிரிவு மகளிருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஊராட்சி மன்றத் தலைவர் பதவி 13 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டதாக கிராம மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இதனால், தேர்தலை புறக்கணிப்பதாக இதே ஊராட்சிக்கு உட்பட்ட பொன்னங்குப்பம் கிராம மக்கள் தெரிவித்தனர். இதுதொடர்பான செய்தி புதிய தலைமுறையில் வெளியான நிலையில், மாவட்ட ஆட்சியர் மோகனும் நேற்று நேரில் சென்று கிராம மக்களிடம் விவரங்களை கேட்டறிந்தார். தேர்தல் நடத்துவதற்கு இடையூறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரிக்கை விடுத்தார்.
இந்த நிலையில், அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்ட பின்னர், இரவில் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவி 20 லட்சத்து எட்டாயிரம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் தொடர்ச்சியாக, கானை ஒன்றியத்திற்கு உட்பட்ட சித்தேரி ஊராட்சி தலைவர் பதவி, வெள்ளேரிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சற்குணம் என்பவருக்கு ரூ.14 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டதாகக் கூறப்படுகிறது. இப்பதவிக்கு 5 பேருக்கு மேல் போட்டியிட முடிவு செய்தநிலையில், ஏலம் ஒரு லட்சம் ரூபாயில் தொடங்கி 14 லட்சம் வரை முடிந்ததாக தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து கிராம மக்கள் புகார் தெரிவித்த நிலையில், வருவாய்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.