டிரெண்டிங்
கிராம மக்களே நிதி திரட்டி நீர்வரத்து ஓடையில் தூர்வாரும் பணி!
கிராம மக்களே நிதி திரட்டி நீர்வரத்து ஓடையில் தூர்வாரும் பணி!
தூத்துக்குடி அருகே கிராம மக்கள் தங்களது சொந்த செலவில் நீர்வரத்து ஓடையில் தூர்வாரும் பணியை மேற்கொண்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே அய்யனேரி கிராமத்துக்கு உட்பட்ட செவல் குளம் கண்மாய் நிரம்பி சுமார் 30 ஆண்டுகள் மேல் ஆகியுள்ளது. இதனால் குளம் வறண்டு காணப்படுகிறது. இந்த கண்மாயின் பரப்பு சுமார் 130 ஏக்கர் ஆகும். இந்த கண்மாய்க்கு வரக்கூடிய நீர் வரத்து ஓடைகள் தூர் வாரப்படாமல் தூர்ந்து போய் உள்ளதால் இந்த கண்மாய்க்கு தண்ணீர் வரத்து அடியோடு நின்று போய்விட்டது. இதையடுத்து பெரிய ஓடையை தூர்வாரி, கரைகளை பலப்படுத்த வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், பிள்ளையார்நத்தம், அய்யநேரி, வெங்காடசலபுரம் கிராம மக்கள் தங்களது சொந்த செலவில் பெரிய ஓடையை தூர்வாரி, தடுப்பணை கட்டி, கரைகளை பலப்படுத்த முடிவெடுத்தனர். இதற்காக ரூ.15 லட்சம் நிதி திரட்டினர்.
இதுகுறித்து வழக்கறிஞர் ரெங்கநாயகலு கூறும்போது, ‘’பெரிய ஓடையில் இன்று ஓடை செப்பனிடும் பணிக்காக தொடக்க நிகழ்வாக பூமி பூஜை நடத்தி உள்ளோம். இந்த ஓடை பகுதியில் இருந்து சுமார் நான்கரை கிலோமீட்டர் அளவுக்கு ஓடை செப்பனிடும் பணி நடைபெற உள்ளது.
இந்த பணிக்கு சுமார் 15 லட்சம் தொகையை ஊர் பொதுமக்களால் செலவு உத்தேசிக்கப்பட்டு உள்ளது. இந்த பணியானது பெரிய ஓடையில் தொடங்கி, அய்யனேரி செவல்குளம் மறுகால் பகுதி வரை பணி நடைபெற்று முடிய உள்ளது.
இந்த பெரிய ஓடை பகுதியில் இருந்து ஓடை சரி செய்து செட்டி குளம் ஓடைக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு, அங்கு இருந்து தண்ணீர் வெங்கடாச்சலபுரம் பூவனகாவலன் கண்மாய்க்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு, பூவன காவலன் கண்மாய் நிரம்பி மறுகால் வழியாக அய்யனேரி செவல்குளம் கண்மாய்க்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இதனால் நூற்றுக்கனக்கான விவசாய நிலங்கள் பயன்பெறும்’’ என்றார்.