ஈபிஎஸ், ஓபிஎஸ் வீட்டில் சோதனை நடத்துங்கள்: விஜயகாந்த்
முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் வீட்டிலும் சோதனை நடந்தால்தான் உண்மை வெளிவரும் என தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
அண்மையில் ரேசன் கடைகளில் வழங்கப்படும் சர்க்கரையின் விலையை இரண்டு மடங்காக அரசு உயர்த்தியது. இந்த விலை உயர்வை கண்டித்து தேதிமுக சார்பில் சென்னையில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், ஜெயலலிதாவின் வேதா இல்லத்தில் நடைபெற்ற சோதனை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அப்போது பேசிய விஜயகாந்த், “வருமான வரித்துறை சோதனை நடைபெறுவதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் ஜெயலலிதாவின் வீட்டிற்குள் சோதனை நடத்துகிறீர்களே, அதேபோன்று எந்த அமைச்சர் வீடுகளிலாவது சோதனை நடத்துங்களேன். அத்துடன் இந்த வருமான வரித்துறையினர் சோதனையை முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் அனைத்து அமைச்சர்களின் வீடுகளிலும் நடத்தினால்தான் உண்மை வெளிவரும் என்பது ஏழை மக்கள் எல்லோருக்கும் தெரியும்” என்று கூறினார்.