லட்சுமி, அட்சயாவுடன் மாட்டுப் பொங்கல் கொண்டாடி மகிழ்ந்த விஜயகாந்த்
தனது வீட்டில் உள்ள பசுக்களுக்குப் பொங்கல் ஊட்டி விஜயகாந்த் மகிழ்ச்சியுடன் மாட்டுப் பொங்கல் கொண்டாடியுள்ளார்.
தமிழகம் முழுவதும் மாட்டுப் பொங்கல் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. மாட்டுப் பொங்கலையொட்டி, தமிழகம் முழுவதும் உள்ள கிராமங்கள் களைகட்டியுள்ளன. மாட்டுத் தொழுவங்களும், உழவுக் கருவிகளும் சுத்தம் செய்யப்பட்டு பூஜை செய்யப்பட்டன. வீடுகளில் உள்ள பசுக்கள் மற்றும் காளைகளைக் குளிப்பாட்டி அலங்கரித்த விவசாயிகள், அவற்றிற்கு பழங்கள், பொங்கலை கொடுத்து தங்களது அன்பை வெளிப்படுத்தினர். பல்வேறு கிராமங்களில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு உள்ளிட்ட வீர விளையாட்டுகளும் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் தனது வீட்டில் உள்ள பசுக்களுக்குப் பொங்கலை ஊட்டி தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் மகிழ்ச்சியுடன் மாட்டுப் பொங்கலை கொண்டாடியுள்ளார். இதுதொடர்பான புகைப்படங்களை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், பசுவை வணங்கும் விஜயகாந்த் அதற்கு பொங்கல் ஊட்டி அன்பை வெளிப்படுத்துகிறார். மேலும் தனது ட்விட்டர் பதிவில், “எங்கள் வீட்டு லட்சுமி, அட்சயா, அர்த்தநாரி, மீனாட்சிக்கு சர்க்கரைப் பொங்கல் ஊட்டி மாட்டுப்பொங்கல் கொண்டாடினோம்.” என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.