“40 வருடம் உழைத்த எங்க அப்பாவை ஒழிச்சிட்டீங்க; என்னையும் ஒழிச்சிடாதீங்க” - விஜய பிரபாகரன்
"40 ஆண்டுகளாக, உங்களுக்காக உழைத்த எங்க அப்பாவை ஒழிச்சதுபோல் என்னையும் ஒழித்துவிடாதீர்கள்" என தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் பேசினார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் விஜயகாந்தின் மகன் விஜய் பிரபாகரன் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது தேமுதிக வேட்பாளர் கு. பாஸ்கரனை ஆதரித்து பேசுகையில், “வேட்பாளர் பாஸ்கரன் விஜயகாந்தால் அங்கீகாரம் பெற்று கஷ்டப்பட்டு படிப்படியாக வளர்ந்து ஆரணி தொகுதி வேட்பாளராக இன்று நிற்கிறார். தேமுதிக, விஜயகாந்த், முரசு, இந்த மக்களுக்கு ஏதாவது தவறு செய்து இருக்கிறதா? விஜயகாந்த் இதுவரை மக்களுக்கு ஏதாவது துரோகம் செய்து இருக்கிறாரா? அப்ப ஏன் அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க மாட்டேங்கிறீங்க?
40 வருட காலமாக தன்னுடைய வாழ்க்கையையே மக்களுக்கு அர்ப்பணம் செய்த ஒரே தலைவர் விஜயகாந்த். இன்னைக்கு நாம எல்லாம் அன்பால் சேர்ந்த கூட்டம். விஜயகாந்த் மகனாக நான் இன்றைக்கு வந்திருக்கிறேன். விஜயகாந்தும் டிடிவி தினகரனும் மக்களுடைய மனதை சம்பாதிக்கிறார்கள். ஆகவே, இந்தத் தேர்தலை நாங்கள் சந்திக்கின்றோம்.
100 ரூபாய்க்கும், சோற்றுக்கும், பீருக்கும் அடிமையாகி உங்கள் ஓட்டுகளை விற்றால் நான் இல்லை; அந்த கடவுளே வந்தாலும் இந்த மக்களை காப்பாற்ற முடியாது. அண்ணன் பாஸ்கரன் வெற்றி பெற்றால் தொகுதிக்கு வந்து மூன்று மாதத்திற்கு உழைக்க நான் தயாராக இருக்கிறேன். துளசி வாசம் மாறும்; ஆனால், இந்த தவசி பையன் வார்த்தை மாற மாட்டேன். சொன்னா சொன்னதுதான்.
ஒரு இளைஞனாக நான் இருக்கும்போதே என்னை பயன்படுத்திக் கொள்ளுங்கள். 40 வருடங்கள் எங்க அப்பா உங்களுக்காக உழைச்சி உழைச்சி மக்கள் நீங்கள் அவரை ஒழிசிட்டிங்க. தயவு செய்து என்னையும் ஒழிச்சிடாதிங்க. ஒரு இளைஞனாக இருக்கும்போது எனக்கு வாய்ப்பு கொடுங்கள். வேட்பாளர் அண்ணனும் நானும் சேர்ந்து ஆரணிக்கு உழைக்க தயாராக இருக்கிறோம். ஒரே ஒருமுறை உழைக்க வாய்ப்பு தாருங்கள்.
ஆரணி அதிமுக வேட்பாளர் இன்னிக்கு அழுதுகொண்டே என்னை ஜெயிக்க வைக்க வேண்டும் என்கிறார். கடந்த 5 வருஷமா இந்த மக்கள் அழுகிறபோது அவர்கள் கண்ணுக்கு தெரியவில்லை. எதுக்கு இந்த மாதிரி நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறீர்கள்.
ஆரணி தொகுதி தேமுதிக வேட்பாளர் அண்ணன் ஜெயிக்க வையுங்கள். நான் என்னுடைய சொந்தக் காசைப் போட்டு மக்களுக்கு உதவிகள் செய்யத் தயாராக இருக்கிறேன். என்னுடைய அப்பா இந்த மக்களை தங்கத்தட்டில் வைத்து தாலாட்ட வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். அப்பாவின் கனவை நிறைவேற்ற அவருடைய மகனாக நான் இங்கு வந்திருக்கிறேன்” என்றார்.