குஜராத் முதல்வராக விஜய் ரூபானி மீண்டும் தேர்வு
குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக விஜய் ரூபானியை பாஜக மீண்டும் தேர்ந்தெடுத்துள்ளது.
குஜராத் மாநிலத்தின் 14-வது சட்டமன்றத் தேர்தல் இரண்டு கட்டங்களாக டிசம்பர் 9 மற்றும் 14 ஆம் தேதிகளில் நடைபெற்றன. வாக்குகள் டிசம்பர் 18 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. பாஜக 99 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை 6-வது முறையாக கைப்பற்றியது. இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி 77 இடங்களை கைப்பற்றியது. மேலும், தலித் அதிகார் மஞ்ச் இயக்கத்தின் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் சுயேட்சையாக நின்ற ஜிக்னேஷ் மேவானி வெற்றி பெற்றார்.
பாஜக வெற்றி பெற்றதை அடுத்து யார் முதல்வர் என்ற குழப்பம் இருந்து வந்தது. முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி, மத்திய அமைச்சர் ஸ்மிர்தி இரானி உள்ளிட்டவர்களின் பெயர்கள் முதல்வர் போட்டியில் அடிபட்டன. குஜராத் முதல்வரை தேர்ந்தெடுக்க பாஜக ஒரு தேர்வுக் குழுவை நியமித்திருந்தது. இறுதியாக இன்று விஜய் ரூபானியை மீண்டும் முதல்வராக தேர்வு பாஜக அறிவித்துள்ளது. மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, குஜராத் பாஜக எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு விஜய் ரூபானியை தேர்வு செய்துள்ளதாக அறிவித்தார். துணை முதல்வராக நிதின் படேல் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அருண் ஜேட்லி அறிவித்தார்.