’நாளைய தமிழக முதல்வரே..!’ கருணாநிதி, ஜெயலலிதா வரிசையில் விஜய் -திருச்சியில் போஸ்டர்.!
நாளைய தமிழக முதல்வரே என திருச்சியில் விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர் கவனத்தை பெற்றுள்ளது
இயக்குநரும் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ. சந்திரசேகர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், “விஜய் மக்கள் இயக்கம் தேவைப்பட்டால் அரசியல் கட்சியாக மாறும். மக்கள் விருப்பப்படும்போது மாறும். மக்கள் கூப்பிடும்போது வரும்” என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், திருச்சி மாவட்ட தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நாளைய முதல்வர் என விஜயை அடையாளப்படுத்தி போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, ஜெயலலிதா புகைப்படங்களின் வரிசையில் விஜய் புகைப்படம் இருப்பது போலவும், தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தின் முன் விஜய் இருப்பது போலவும் அந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும், “1991 முதல் 2016 வரை சட்டமன்ற தேர்தலில் இரு பெரும் தலைவர்களை கண்ட தமிழகத்தில் தற்போது உள்ள வெற்றிடத்தை நிரப்ப வருக. இளம் தலைவரே, நாளைய தமிழக முதல்வரே! 2021இல் ஆட்சி உங்கள் தலைமையில் அமையட்டும்! தமிழகம் மகிழ்ச்சியில் மலரட்டும்” என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் திருச்சியின் பிரதான சாலைகளான பாலக்கரை, திருச்சி மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம், ஜங்ஷன் உள்ளிட்ட பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் எஸ்.ஏ.சந்திரசேகர் புகைப்படமும் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் அழைக்கும்போது விஜய் அரசியலுக்கு வருவார் என கூறப்பட்ட நிலையில் அவரது ரசிகர்கள் அவருக்கு அழைப்பு விடுத்து போஸ்டர் ஒட்டியுள்ளனர்.