ஜெயலலிதா இல்லாதது வருத்தமளிக்கிறது - வெங்கய்ய நாயுடு
இந்தியாவில் மருத்துவ சேவையில் தமிழ்நாடு முன்னோடியாக உள்ளது என குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.
டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைகழகத்தின் 30ஆவது பட்டமளிப்பு விழா சென்னை பல்கலைக்கழகத்தில் உள்ள நூற்றாண்டு அரங்கில் நடைபெற்றது. இதில் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு, தமிழக அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் எம்ஜிஆர் பல்கலைகழக துணைவேந்தர் கீதாலட்சுமி ஆகியோர் கலந்துக்கொண்டனர். இந்த பட்டமளிப்பு விழாவில் 4529 மாணவ மாணவிகளுக்கு துணை ஜனாதிபதி கையால் பட்டம் பெற்றனர். மேலும் 328 மாணவர்களுக்கு பதக்கங்களும், முனைவர் பட்டமும் வெங்கையா நாயுடு அளித்தார்.
பின்பு நிகழ்ச்சியில் பேசிய வெங்கய்ய நாயுடு, ஒவ்வொரு மாவட்ட தலை நகரங்களிலும் மருத்துவ கல்லூரி அமைக்க வேண்டும் என்பதே மத்திய அரசின் நோக்கம் என தெரிவித்தார். உலக அளவில் மருத்துவத்துறை, மிகவும் தன்னலமற்ற துறையாக விளங்குகிறது என தெரிவித்தார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை நினைவுகூர்ந்த வெங்கய்யா, கடைசியாக ஜெயலலிதாவின் பதவியேற்பில் இந்த நூற்றாண்டு மாளிகையில் கலந்துக்கொண்டேன், தற்போது அவர் இல்லாதது வருத்தமளிக்கிறது என்று கூறினார். மக்களின் நல்வாழ்வை மேம்படுத்தும் வகையில் தொடர்ந்து இந்தியா பல்வேறு முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. ஒவ்வொரு மருத்துவரும் 3 வருடங்களுக்கு கிராம புரங்களில் சேவை செய்ய பிரதமரிடம் பேசப்பட்டுள்ளது. மக்களுக்கு சிறந்த மருத்துவ சேவை வழங்க மத்திய அரசு ஆயுஷ்மான் பாரத் என்ற திட்டம் அறிமுகம் செய்கிறது. இதன்மூலம் 10 கோடி ஏழை எளிய குடும்பங்கள் பயனடையும். ஒரு குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் வரை காப்பீடு வழங்கப்படும் என்றார்.