கடும் கட்டுப்பாடுகளுடன் வேளாங்கண்ணி பேராலய திருவிழா... பக்தர்களுக்கு அனுமதியில்லை..!
வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கும் நிலையில் கொரோனா சூழல் காரணமாக பக்தர்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி ஆலய திருவிழா ஆண்டுதோறும் ஆகஸ்ட் 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, செப்டம்பர் 8-ஆம் தேதி கொடி இறக்கத்துடன் முடிவடையும். இந்த திருவிழாவுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகைதருவர். கூட்ட நெரிசலில் வேளாங்கண்ணி நகரமே திக்குமுக்காடும்.
ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்தோடு தமிழக அரசு கொண்டுவந்துள்ள ஊரடங்கால், வேளாங்கண்ணி வெறிச்சோடு காணப்படுகிறது. அதேபோல அரசு விதித்துள்ள பல கட்டுப்பாடுகளுடன் இந்த திருவிழா நடைபெறும் என ஆலய நிர்வாகத்தின் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி கொடியேற்ற நிகழ்ச்சியில் பொதுமக்கள் யாரும் பங்குபெற வரவேண்டாம் என்று கோரிக்கை வைத்துள்ளனர். கடற்கரையில் தொடங்கி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வரும் கொடி ஊர்வலம் இந்த ஆண்டு கடற்கரையில் தொடங்கி நேராக சென்று ஆலயத்தை சுற்றியபிறகு மாலை 4.30 மணிக்கு கொடியேற்றப்படும். இதில் 30பேர்கள் மட்டுமே கலந்து கொள்வர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேளாங்கண்ணிக்கு வரும் பாதைகள் முழுவதும் அடைக்கப்பட்டுள்ளது. 21 சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு 1100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வெளி மாவட்டங்களில் இருந்து வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரையாக பக்தர்கள் யாரும் வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீறி வருபவர்களை போலீசார் தடுத்தி நிறுத்தி திருப்பி அனுப்பி வருகின்றனர்.
உள்ளூர் மக்களும் வெளியே சென்றுவந்தால் அவர்கள் ஆதார் கார்டை காட்டிய பிறகே ஊருக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். நகரில் பல இடங்களில் சுகாதரத்ததுறையின் சார்பாக மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்களின் மத்தியில் ஏற்றப்படும் கொடி, இந்த ஆண்டு பக்தர்கள் இல்லாமல் ஏற்றப்பட இருக்கிறது. இதனால் சுற்றுலா பயணிகளை நம்பி வாழும் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.