தமிழிசைக்கு எதிராக விடுதலைச் சிறுத்தைகள் போராட்டம்
திருமாவளவனை தரக்குறைவாகப் பேசியதாகக் கூறி தமிழிசைக்கு எதிராக சேலம், சென்னை உள்ளிட்ட இடங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழிசை சவுந்தரராஜனின் உருவபொம்மையை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எரிக்க முயற்சித்தனர். ஆனால் அவர்களிடமிருந்து உருவபொம்மையை காவல்துறையினர் பறித்தனர். இருப்பினும் காவல்துறையினரை துரத்திச் சென்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் தமிழிசையின் உருவ பொம்மையை எரிக்க முயற்சித்தனர். அதையடுத்து, தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட விசிகவினர் தமிழிசை சவுந்தரராஜன் மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். இதேபோன்று சென்னை சிந்தாதிரிபேட்டையிலும் காவல்நிலையம் அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நடிகர் விஜய்யை வளைத்துப் போடும் வகையில், மெர்சல் திரைப்படத்தை முன்வைத்து பாஜக மிரட்டுகிறது என குற்றம்சாட்டியிருந்தார் திருமாவளவன். இதற்கு பதிலளித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “திருமாவளவனின் அனுபவம் பேசுகிறது. ஏதாவது ஒரு இடத்தை வளைத்துப் போட வேண்டும் என்றால் முதலில் போய் மிரட்டுவார். யாரையாவது வளைச்சுப் போட வேண்டும் என்றாலும் முதலில் மிரட்டுவார். இன்றைக்கு அவர்கள் அலுவலகம் இருக்கிற இடங்களில் இருந்து எல்லாவற்றையுமே வளைத்துப் போடுகிறவர்கள், நாங்கள் விஜய்யை வளைத்துப் போட முயற்சி செய்வதாக நினைக்கிறார்கள்” என தெரிவித்திருந்தார்.