‘அனைத்துத் தரப்பினரும் படிக்கக்கூடாது என்பதே புதிய கல்விக்கொள்கையின் நோக்கம்’: திருமாவளவன்

‘அனைத்துத் தரப்பினரும் படிக்கக்கூடாது என்பதே புதிய கல்விக்கொள்கையின் நோக்கம்’: திருமாவளவன்
‘அனைத்துத் தரப்பினரும் படிக்கக்கூடாது என்பதே புதிய கல்விக்கொள்கையின் நோக்கம்’: திருமாவளவன்
Published on

அனைத்துத் தரப்பினரும் படிக்கக் கூடாது என்பதே தேசிய கல்விக் கொள்கையின் நோக்கம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

புதிய தேசிய கல்விக்கொள்கை தொடர்பாக கண்டன அறிக்கை வெளியிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், “அனைவருக்கும் கல்வி என்பதற்கு மாறாக ஒரு சிலருக்கு மட்டுமே கல்வி என்ற வர்ணாசிரமக் கோட்பாட்டை மீண்டும் புகுத்துவதே தேசிய கல்விக் கொள்கையின் நோக்கம் ஆகும். இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்த கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த கூடாது என மத்திய-மாநில அரசுகளை வலியுறுத்துகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், “இந்த தேசிய கல்விக் கொள்கையில் அனைவருக்கும் கல்வி வழங்குவது பற்றி எந்தவித குறிப்பான திட்டமும் இல்லை. அது மட்டுமில்லாமல் மூன்றாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு வைத்து ஏற்கனவே படிப்பவர்களையும் இடை நிறுத்தம் செய்வதற்கு இந்த கல்விக் கொள்கை வழிவகுக்கிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக மும்மொழிக் கொள்கையை இந்த தேசிய கல்விக் கொள்கை திணிக்கிறது. எந்தவொரு வளர்ச்சியடைந்த நாட்டிலும் மும்மொழிக்கொள்கை என்பது பின்பற்றப்படவில்லை. ஒரு மொழிக் கொள்கை, இருமொழிக் கொள்கை மட்டுமே இருக்கின்றன. இந்நிலையில் இந்தியையும், சமஸ்கிருதத்தையும் பிறர் மீது திணிக்க முயல்வது ஏற்புடையதல்ல. குறிப்பாக, தமிழ்நாட்டு மக்கள் இந்தித் திணிப்பை ஒருகாலும் ஏற்கமாட்டார்கள்” என்று கூறியுள்ளார்.

கொரோனா பெருந்தொற்றின் காரணமாக நாடு முடக்கப்பட்டுள்ள சூழலைப் பயன்படுத்திக்கொண்டு மாநில அரசுகளின் அதிகாரத்தைப் பறிக்கும் விதமாகவும், கல்வியை காவிமயமாக்கும் நோக்கத்தோடும் கொண்டுவரப்படும் இந்த கல்விக் கொள்கையை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து தமிழகத்தின் ஒன்றுபட்ட கருத்தை மத்திய அரசுக்குத் தெரிவிக்கும் விதமாக அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டுமாறு தமிழக முதல்வரை வலியுறுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com