யார் சொன்னது குஷ்புவுக்கு வாய்ப்பில்லை என்று? - வானதி ஸ்ரீனிவாசன் கேள்வி
தேர்தலில் போட்டியிட யாருக்கு வாய்ப்பு என கட்சி மேலிடம் முடிவு செய்யும் என பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பு பம்பரமாக தேர்தல் பிரசாரங்களை செய்து வந்தார். குறிப்பாக சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் முழு நேரமும் தேர்தல் பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வந்தார். இதனால் அங்கு குஷ்பு கண்டிப்பாக போட்டியிடுவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது.
ஆனால் அதிமுக, பாஜகவுக்கு ஒதுக்கிய 20 தொகுதியில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி இல்லை. எனவே குஷ்பு வேறு தொகுதியில் களமிறக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில், இன்று நடிகை குஷ்பு, பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வந்தனர். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த நடிகை குஷ்பு “தேர்தலில் போட்டியிடுவதாக நான் எப்போதும் கூறவில்லை. ஆரம்பத்திலிருந்தே எனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புகளைத்தான் நான் செய்தேன். எனக்கு சீட் கொடுப்பார்கள் என்றும், தேர்தலில் நிற்பேன் என்றும் ஒப்புதலோடு பாஜகவுக்கு வரவில்லை. கட்சி மீது இருக்கும் நம்பிக்கையில்தான் பாஜகவிற்கு வந்தேன். நம்பிக்கை எனக்கு இருக்கு. இந்த தேர்தலில் பாஜகவுக்கு மிகப்பெரிய வெற்றி வாய்ப்பு இருக்கிறது. சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரைக்காக அசாம், மேற்கு வங்கம் கூட செல்வேன்” என்றார்.
உடனே குறுக்கிட்டு பேசிய பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் “5 சட்டப்பேரவை;j தேர்தல் நடக்கும் மாநிலங்களுக்கும் குஷ்புவை அழைக்கிறோம். யார் சொன்னது குஷ்புவுக்கு வாய்ப்பில்லை என்று. யாருக்கு என்ன பொறுப்பு என்பதை கட்சி தலைமை முடிவெடுக்கும். பொறுமையாக இருங்கள். யாருக்கு என்ன வேலை கொடுக்க வேண்டும் என கட்சிக்கு தெரியும்” எனக் கூறினார்.

